undefined
undefined
undefined
சிங்களவர்கள் தமிழ் பேசமாட்டர்கள். அது அவர்களுக்கு தேவையும் இல்லை. வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து வருபவர்கள் தாங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அந்தரப்படும் வரையில் சிங்களம் படிக்க மாட்டார்கள். இன்று தலை நகரில் வந்து பெரிய பெரிய இடங்களில் எல்லாம் உத்தியோகம் பார்ப்பவர்கள் யார்? மூன்று மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவர்களாக வளர்ந்து வருபவர்கள் யார்? இதே போல் பெரும்பான்மையாக தலைநகரில் எங்கும் கூலிவேலைகளுக்கும் இதர வேலைகளுக்காகவும் அமர்த்தப்படுபவர்கள் யார்? ஒரு கணம் சிந்தித்தீர்களா? எல்லாம் மலையகப்பகுதியினர் தான். ஏன் இந்த வேறுபட்ட இரண்டு நிலை? அந்தக் காலத்தில் மலையக கல்விநிலை வீழ்ச்சியை அடைந்திருந்தன. இன்றும் ஏன் வீழ்ச்சி அடைகின்றது. குறித்த ஒரு பிரிவினர் மட்டும் தொடர்ந்து படித்து முன்னேறும் போதும் பலர் மலையகத்திலும் தலைநகரிலும் கூலி வேலையாட்களாக இருக்கக் காரணம் என்ன?

எங்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை எனது வேலை சரியாக நடந்தால் போதும், என்று நினைக்கும் அரசியல் தலைவர்கள் சிலராலும் தங்கள் ஆதாயத்திற்காக தொழில்பார்க்கும் சில அதிகாரிகளாலும் தான். இன்றைய மலையக சிறுவர்களின் கல்வி நிலைகுலைந்து காணப்படுவதற்கும் இவர்கள் தான் காரணம். சிறுவர்களுக்கான உரிமைகள் அவர்களுக்கான சட்டங்கள் என்பவை பலரும் அறிந்த விடயமே. அவர்கள் கல்வி கற்கும் உரிமையானது மறுக்கமுடியாத ஒன்று. அதனைக்கிடைக்க சரியானமுறையில் வழிவகைகள் செய்கின்றோமா? பல்வேறுபட்ட காரணங்களுக்காக சிறுவர்கள் இன்றும் வேலைக்கமர்த்தப் பட்டுக்கொண்டிருக்கிறர்கள். குடும்பத்தைக் காப்பாற்ற படிப்பை விடுத்து கனவுகளுடனும் கைநிறைய சம்பாதிக்கும் எண்ணத்துடனும் தலைநகர், வெளிநாடு என கையிலுள்ள காசைக்கூட கரைத்து சீரழிகிறார்கள். அவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுவர்களைப் பற்றி அவர்களின் பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ சிந்திப்பதில்லை. இவ்வளவு ஏன் அந்த பிள்ளைகளை வேலைக்கமர்த்தும் முதலாளிகள் கூட சிந்திப்பதில்லை. தங்கள் பிள்ளைகளை மட்டும் அவர்கள் சர்வதேச பாடசாலைகளில் சேர்ப்பார்கள். இவ்வாறான நிலமைகளினால் பிள்ளைகள் தொடர்ந்தும் மிகுந்த மன உலைச்சல்களுக்கு ஆளாகின்றார்கள்.
“நாங்க என்னா செய்றது? நாங்க பிறந்து வளந்த சூழ்நிழை அப்பிடி என்ன பண்றது மழைக்கு கூட ஸ்கூல்ல ஒதுங்கவிட்டது இல்ல. வறுமை எங்கள ஆட்டிப்படைச்சிருச்சி. நாங்க படிக்காத நிலையில என்ன வேலை செய்றது? எங்க போனாலும் என்ன படிச்சிருக்கிங்கனுதா கேக்குறாங்க அப்பிடி இருக்கையில வீட்டு வேலைதான் சரியாப் படுது” என்று என்று அங்கலாய்க்கிறார்கள் இன்றைய மலையக பெரும்பாலான பெண்கள். இப்படியான சந்ததியினருக்கு சரியான வழிகாட்டல் இல்லாமையே காரணம்.

பிள்ளையின் படிப்புக்கு மாதம் ஐயாயிரம் செலவு செய்யும் முதலாளிமார் ஒவ்வொருவரது வீட்டிலும் ஒரு சிறுவர் தொழிலாளி வீதம் இருக்கின்றார்கள். அவர்களது செலவில் ஒரு பகுதியையாவது இவர்களுக்கென செலவு செய்யலாமே என்ற எண்ணம் வந்தால் எப்படி இருக்கும்? உலகலாவிய ரீதியில் இலங்கை கல்வி நிலை முன்னேற்றம் கண்டுள்ளது. படித்தவர்களின் எண்ணிக்கை 92 சதவிகிதத்திலும் உயர்வாக உள்ளது. தற்போது இலவசக் கல்வி, சீருடை, பாடப்புத்தகம், என்பவற்றோடு காலை உணவு வழங்கும் திட்டமும் நடைமுறையிலுள்ளது. அனேகமாக அனைத்து அரச பாடசாலைகளிலும் இவை வழங்கப்படுகிற நிலையில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதது யாருடைய தவறு….?
மலையகத்தில் ஆண்பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் கல்வியில் முன்னிற்கிறார்கள். இருப்பினும் பொருளாதார பிரச்சினை ஏற்படும் போது பெண் பிள்ளைகளின் கல்வியே பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மற்றவர்களின் சுகயீனம், தாய்மார்களின் பிள்ளைப்பேறு, விருந்தினர் வருகை, திருவிழாக்களின் போது சம்மந்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக பாடசாலை செல்ல அவர்கள் தடை
செய்யப்படுகின்றனர். வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயாரோடு பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதால் வீட்டில் படிக்க நேரமில்லாமல் இருக்கின்றது. குறிப்பாக பெண்பிள்ளைகள் பருவமடைந்ததும் சடங்கு சம்ரதாயம் என்ற பேரில் மூன்று நான்கு மாதங்கள் வீட்டில் நிறுத்தி விடுவார்கள். இவ்வாறு மூன்று மாதத்திற்கு மேல் வீட்டில் நிறுத்தி வைக்குமிடத்து அவர்கள் பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்படுகின்றனர். பருவமடைந்ததற்குப் பிறகு ஏனைய ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க விடமாட்டார்கள். இது போன்ற விடயங்களாலும் கல்வி புறக்கணிக்கப்படுகிறது.

ஒரு சிலர் இவ்வாறான சம்பிரதாயங்களை தேவையற்றதாக கருதுகின்றார்கள்.
இவர்களுக்கு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவுகின்றன. சில கருத்தரங்குகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் இவ்வாறான உதவிகள் ஒரு சிலரை அல்லது ஒரு பிரதேசத்தையே சென்றடைகிறது. மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பிரதாயங்கள் ஊறிக்கிடந்தாலும் காலப்போக்கில் அவை மாறுபடக்கூடியவை தான். பிள்ளைகளுக்கான கல்வி எந்தளவு முக்கியம் என்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தவரை படித்த சமூகம் அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும்.
சிறுவர்களை பாதுகாக்க வேண்டியதும், அவர்களுக்கு குடும்பத்தை தவிர்ந்த இன்னுமொறு உலகம் இருப்பதை உணர்த்துவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்பானவர்கள் எல்லோருடைய கடமையுமாகும். அவர்களது உரிமை சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். சற்று சிந்தியுங்கள்.. அவர்களுக்கே உரித்தான கல்வியை வழங்குவதற்கு முழு சமூகமும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
தகவல் மூலம் - மெகி