twitter










இன்று சமுதாயத்தில் முதலிடம் வகிப்பது கல்விதான் கல்வியை அடிப்படையாக வைத்துதான் மனிதன் முன்னேறுவதற்கு அதிகளவான வாய்ப்புள்ளது. இவ்வாறான கல்விகளிலே ஊழல்கள் நிறைந்து காணப்படுகின்றன. நேர்மை திறன்மிக்க தேசத்தை கட்டியெழுப்புவோம் எனும் நிறுவனம் ஓர் முன்மாதிரியான ஆய்வு ஒன்று செய்து வெளியிட்டது. அதிலே ஊழல்களிலே முதலிடம் வகிப்பது பாடசாலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் பல்வேறு விதமாக ஊழல்கள் நிகழ்கின்றன எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. மாணவர்களை பாடசாலையில் அனுமதிப்பதற்கு, ஆசிரியர்களை இடம்மாற்றுவதற்கு, அதிபர் பதில்அதிபர்கள் நியமனம் செய்வதற்கு, பாடப்புத்தகம் வழங்குவதற்கு, பரீட்சைகள் நடாத்துவதற்கு, புள்ளிகள் வழங்குவதற்கு, உட்கட்டமைப்பு நிறுவுவது போன்ற அத்தனை விடயங்களிலும் ஊழல்கள் நிறைந்து காணப்படுகின்றன.



இவ்வாறு பல வழிகளிலும் கல்வியில் ஊழல் உட்செவ்வதால் பாதிக்கப்படுவது எதிர்கால இளம் சமுதாயம்தான.; இன்றைய தலைவர்களின் பொக்கட்டுக்களில் பணம் நிறையுமே தவிர நாளை வரப்போகும் தலைவர்களுக்காக எந்தவிதமான அத்திவாரமும் இல்லாதுபோகும். ஒழிக்கப்பட வேண்டிய இலஞ்சமானது எல்லாத்துறைகளையும் ஆக்கிரமித்தது மட்டுமல்லாது கல்வித்துறையிலும் தன் ஆதிக்கத்தை செலுத்துவதற்கு காரணம் அரசியல் தலைவர்களின் தலையீடுதான். கல்வி அமைச்சு அது சார்ந்த அமைச்சர்கள் தங்களுடைய செயற்பாடுகளை கல்வித்துறைக்குள் திணிக்க முற்படுவதால் இலஞ்ச ஊழல் நடவடிக்கைகள் அதிகரிக்கின்றது.

தொடரும் ஊழல் நடவடிக்கைகளால் நாட்டில் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. வேலையற்ற பட்டதாரிகள் வேலை நியமனம் செய்யுமாறு ஒரு புறத்தில் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களை மேற்கொள்ளும் அதேவேளை தற்போது நாட்டில் 19 ஆயிரத்து 819 ஆசிரியர்கள் தேவை என கூறப்படுகின்றது. இந்த நிலமையை எவ்வாறு சமநிலைப்படுத்த முடியும். இரண்டு கோணங்களும் வேறுபட்டதாகவே காணப்படுகின்றது. இவ்வாறு பல எண்ணிக்கையிலான பட்டதாரிகளை வைத்துக்கொண்டு அரசியல் செல்வாக்கால் தகைமையற்றவர்கள், ஆசிரியருக்கான முன்பயிற்ச்சியற்றவர்கள், தரவரிசை முறையில் ஒழுங்குபடுத்தப்படாதவர்களை நியமனம் செய்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் விளைவு என்ன? மாணவரின் கல்வி வீழ்ச்சி நிலைதான்.












இன்றைய காலத்தில் அதிகமாக மோசடி இடம்பெறுவது தரம் 01, தரம் 05 பாடசாலை அனுமதியில்தான். பாடசாலை அதிபர்கள் தங்களுக்கு விரும்பிய தொகைகளை பெற்றோர்களிடமிருந்து அறவிடுகின்றார்கள். இதனால் எத்தனையோ மாணவர்கள் பாடசாலைக் காலத்தை இழக்க வேண்டிய பாரிய நெருக்கடியை தோற்றுவிக்கின்றது. இது தொடர்பாக அரசின் நடவடிக்கைகள் இன்னும் திருப்திகரமானதாக இல்லை. ‘எங்கள் பிள்ளைகளுக்கு இந்த பாடசாலை அனுமதியளிக்கவில்லை’ என்று ஆர்ப்பாட்டம் செய்யும் பெற்றோரும், வழக்குத் தொடர்பவர்களும், ஏன் உயிரைக்கூட விடுபவர்களும் இருக்கின்றார்கள். கல்விக்காக இப்படியான பரிதாப நிலை தேவையா?. சிந்திக்கவே கவலையாக இருகின்றது.













ஜனாதிபதி தொடக்கம் அதிபர் வரை அனைவரும் பாடசாலைகளில் தான் கல்வி கற்றவர்கள். கல்வி அறிவுடையவர்கள் கூட கல்வியை வணிகப்பொருளாக மாற்றுவது எந்த விதத்தில் நியாயமாகும். அவர்கள் தாங்கள் நடந்து வந்த வாழ்க்கைப் பாதைகளை சிந்திப்பதில்லையா? அவர்களும் அப்படித்தான் காசைக்கொட்டி கொடுத்திருப்பார்களா?


கல்வி என்ற ரீதியில் நோக்கும்போது இலங்கையில் இது அனைவருக்கும் உரித்தான அடிப்படை உரிமையாகின்றது. இதனை சகலருக்கும் கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கமாகும். பாடசாலைக்கல்வியை இலகுவாக கிடைக்க உரியவர்கள் வழி செய்வார்களா? இதற்கு பொதுமக்கள் முன் வரவேண்டும். இது தொடருமாக இருந்தால் நாளைய சமூகம் வெற்று சமுகமாக உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறான சீரழிவுகள் உடனுக்குடன் சீர்திருத்தப்பட வேண்டும்.

2 comments:

  1. நல்ல கருத்து

  1. வாழ்த்துக்கள்
    அருமையான கட்டுரை தொடரும் பயணம் சிறப்பாக அமையட்டும்.

Post a Comment