twitter


இன்று உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்தமான பார்வையும் ஜெனீவாவின் பக்கம் திரும்பியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 19ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இது இலங்கை அரசாங்கத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தொடரில் தாம் பங்கேற்கப்போவதில்லை என த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கூற்று ஒட்டுமொத்த த.தே.கூ உறுப்பினர்களது கூற்றல்ல என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தக்கூட்டத்தொடரில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவானது சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள இன்றைய நாளில் மாநாடு நடைபெறவுள்ள இடத்திற்கு முன்பாக இலங்கை தொடர்பான சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்று இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் - வவுனியா – மட்டக்களப்பு – கொழும்பு ஆகிய இடங்களில் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தமிழ்க்கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டங்களை வடக்கு – கிழக்கில் முன்னெடுத்தார்கள். கொழும்பு கோட்டை ரெயில் நிலையப்பகுதியில் தற்போது பெருமெடுப்பில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதால் போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள சட்டக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மேலும் பல உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் போக்குவரத்துக்கு பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தங்கள் உறவினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.




ஒரு வாரம் பதிவு எழுதாத பதிவர்களையே ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள். ஒரு வருடம் கழித்து வரும் என்னை யார் தான் நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறார்கள். அதே போல நானும் உங்களில் யாரையும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. காரணம் நான் பதிவெழுதாக காலப்பகுதியில் பதிவுலகப் பக்கமே வருவதில்லை. திரட்டிகள் கூட மறந்து போய்விட்டது. நிறுவன மாற்றம் - அதிகரித்த வேலைகள் என பதிவுலகப்பக்கமே தலை வைக்க முடியாதளவிற்கு வேலை வேலை வேலை.

பழையவர்களில் ஒரு சிலரைத் தவிர எல்லோருமே புதியவர்களாக இருக்கிறார்கள். நிறைய பதிவர்களின் வரவு பதிவுலகிற்கு ஆரோக்கியமாக இருந்தாலும் பழையவர்களைக் காண முடியவில்லையே என்பது வருத்தமாக உள்ளது. நானே “வேலை” என்பதை முன்னிலைப்படுத்தும் போது மற்றவர்களும் அதைத் தானே கூறுவார்கள். ஆனாலும் எல்லோரும் திரும்பி புதிய பதிவர்கள் - பழையவர்கள் என பதிவுலகைக் கலக்க வேண்டும் என்பது எனது ஆசை.

பதிவுப்பக்கம் மீண்டும் வந்தாகிவிட்டது. எதை(எவற்றை) எழுதுவது என்பது தான் ஒரே குழப்பமாக இருக்கின்றது. முன்பு ஊடகவியல் கல்லூரியில் படிக்கும் போது கொஞ்சம் எழுத்துக்களோடு அடிக்கடி பழக வேண்டியிருந்தது. கல்லூரி பாட விதானத்துக்காக சில விடயங்களைத் தேடி எழுதும் போது அதில் பாதியை ப்ளாக்கில் ஏற்ற முடிந்தது. தற்போது எழுத்துலகுடன் சம்பந்தப்படாத ஒரு உத்தியோகத்தில் இருப்பதால் பேஸ்புக்கிற்காக மட்டும் தான் கணனி விசைப்பலகையை தட்ட முடிகின்றது.

மீண்டும் விரைவில் பதிவுடன் சந்திக்கிறேன். (நம்புங்கப்பா!)



ஏனைய பதிவர்களுக்கு எப்படி கடந்த இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு போனது என தெரியவில்லை. ஆனால் நான் உட்பட அதிகமான பதிவர்கள் என்ஜோய் பண்ணி இருப்பார்கள் என்று மட்டும் எனக்கு நம்பிக்கை.

தெரியாத முகங்கள் அனைவரையும் சந்திப்பில் நேரில் பார்க்கக்கூடியவாறு இருந்தது. பதிவர்கள் சிலரை பெயர் மூலமே அறிந்து வைத்திருத்தேன். ஆனால் இங்கு அனைத்து பதிவர்களும் கண்களிலே சிக்கி விட்டனர். அனைத்து நண்பர்களுக்கும் 'ஹலோ' சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

என்னடாப்பா நேரிலே கண்டு காணாதது போல நின்ற இந்தப் பிள்ளை ப்ளாக்கரில வந்து ஹலோ சொல்லுகின்றாளே என பார்க்கின்றீர்களா? எல்லாமே வெட்க சுபாவம் தானுங்க. (அப்படீன்னா?)

முதலாவது காரணம் எல்லோரும் பழக்கப்பட்டவங்கள் இல்ல. அடுத்தது பெண்களின் வருகை குறைவாக காணப்பட்டது. மூன்றாவது கிளாசுக்கு போக வேணும் என்ற அவசரம். பதிவர்களில் அதிகமானவர்கள் ஆண்கள். அவர்களுடன் நானாகச் சென்று கதைப்பதற்குத் தயக்கமாக இருந்தது. பெண்களை விட ஆண்கள் தான் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் போலும். ஏனெனில் யாருமே வநது எங்களுடன் கதைக்கவில்லை. இவற்றையெல்லாம் விட காரணங்களும் இல்லாமல் இல்லை...

முதலிலே நாங்கள் எப்படி சென்று கதைப்பது என்றதொரு பிரச்சினை. அப்படி இருந்தும் மருதமூரான் அண்ணா, கூல்போய் கிருத்திகன், தாருஹாஷினி, ஜனா அண்ணா போன்றவர்கள் ஒரு நிமிடமோ இரு நிமிடமோ வந்து உரையாடி விட்டு சென்றார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. வதிசசும், நிரூயாவும் ஒரு தடவையேனும் போட்டோ எடுத்து விட்டு செல்லுங்கள் என்றதொரு வார்த்தையாவது சொல்லி வைத்தார்கள். அவர்களுக்கும் நன்றி.

பதிவர் சந்திப்பும் சரியாகத்தான் சென்றது பெரிய பிரச்சினை என்று ஒன்றும் வந்ததாகத் தெரியவில்லை. கருத்து முரன்பாடுகள் இருந்தது உண்மைதான். அக் கருத்து முரண்பாடு எங்கேயும் ஒன்று இருக்கத்தான் செய்யும். ஏனெனில் எல்லோருடைய மன நிலையும் ஒரே மாதிரியானது இல்லையே!

ஆழகான விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார் மு.மயூரன். அவருடைய பெரும்பாலான கருத்துக்கள் எனக்கு சரியாகவே தோன்றியது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. லோஸன் அண்ணா கடந்த சந்திப்புக்களில் கதைத்த அளவிற்கு கதைக்கவில்லை. அமைதியாக அவதானித்துக் கொண்டிருந்தார். அருண் அண்ணாவும் தன் பங்கிற்கு விளக்கம் தந்தார்.

ஆனால் ஒன்று பதிவர்களே! புல்லட் அண்ணாவிற்கு ஒரு பெரிய கவலை பதிவர்கள் எல்லாரும் சேர்ந்து ஓய்வூதியம் கொடுக்கவில்லை என. புறவாயில்லை அடுத்த தடைவை இதை பற்றி யோசிக்கலாம் என்று இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால் கவலை வேண்டாம் புல்லட் அண்ணா.

நிரூஜாவும் நன்றாகவே தொகுத்து நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். குழுமத்தினை எவ்வாறு கையாளுவது என கௌபோய் மது கூறியிருந்தார். என்னுடைய நண்பி ஒருவர் இன்னமும் குழுமத்தில் இணையாமல் உள்ளார். அவவும் குழுமத்தில் இணைவதற்கு மது ரொம்பவே உதவி புரிந்துள்ளதாக கூறினார். கடனை வாங்குவது போல் பயந்து பயந்து காசைச் சேகரித்தார் பவன். நிறையவே புதியவர்கள் வந்திருக்கிறார்கள்.

கோபி வாங்கி வந்த வடை தூள் தூளாகி விட்டது என நினைக்கிறன் . மன்னிக்கனும் அது பகோடா என பின்னர் தான் தெரிந்து கொண்டேன். (ஹீ ஹீ) அது நன்றாக இருந்தது. ஆனால் அனுதினன் வீட்டில் செய்த றோல் பெஸ்ட். அவங்க அம்மாவுக்கும் நன்றிகள். கேசரி நிரூஜா வீட்டிலிருந்தாம் வந்தது. ட்ரிங்ஸ் வரோ கரைச்சது போல.. அது தான் ஒழுங்கா இல்ல. இடைவேளை சிற்றுண்டி அனைத்தும் நன்றாக இருந்தது.

பதிவர்கள் பதிவுலகைத்தாண்டி என்ன செய்யலாம் என ஆராயப்பட்டிருந்தது. நிச்சயமாக எதையாவது செய்ய வேண்டும். அதுவும் ஒற்றுமையாக.. நானும் ஒத்துழைப்பு வழங்கத் தயார்.
டிஸ்கி : என்னங்க தலைப்பினை பார்த்தவுடன் பயந்திட்டீங்களா? அப்படிச் சொன்னால்தானே இந்தப்பக்கம் வர்ரீங்க. வாங்க வந்துட்டீங்களா.? உங்க கருத்தையும், வாக்கையும் மறக்காமல் பதிவு செய்யுங்களன்.


சரியாக நான்கு மாதங்களின் பின் ஒரு பதிவுடன் சந்திக்கின்றேன். அதுவும் 3ஆவது இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு நெருங்கும் வேளையில். (நானும் இலங்கைப் பதிவர் எண்டு காட்டோணும் எல்லோ!). அதிகரித்த வேலைப்பழுக்களால் பதிவுலகத்தை மறந்து விட்டேன்.

தமிழ்ச் சங்கத்தில் நடந்த முதலாவது சந்திப்பில் கலந்து கொண்டேன். 2ஆவது சந்திப்பில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை. மூன்றாவது சந்திப்பில் கலந்து கொள்வேனா என்பது 50 - 50 வாய்ப்பிலேயே இருக்கின்றது. அதனால் வருகையை உறுதி செய்யவில்லை. சந்திப்பு மாலையில் இடம்பெற்றால் எனக்கு வசதியாக இருந்திருக்கும். (ஒவ்வொரு பதிவர்களின் நேரத்தையும் தனித்தனியே கேட்க முடியாது தானே!) அதனால் சந்திப்பு சிறப்பாக இடம்பெற மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன். ஏற்பாட்டாளர்களினால் வழங்கப்பட்டிருக்கும் நிகழ்வு பற்றிய அறிவிப்பு கீழே...


நிகழ்வு: பதிவர் சந்திப்பு 2010
திகதி: 19-12-2010
நேரம்: காலை 09:31
இடம்: கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06

நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • பதிவர்கள் அறிமுகம்
  • கலந்துரையாடல் 1 – கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல் மற்றும் ஏனைய தொழிநுட்பப் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 2 – தமிழ் தட்டச்சு கருவிகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும்.
  • இடைவேளையில் இன்னிசை.
  • கலந்துரையாடல் 3 – பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 4 – பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.
  • பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.
  • நன்றியுரை.

எனவே பதிவர்கள், பதிவு எழுத விரும்புபவர்கள், பதிவுலக வாசகர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் வரவேற்கின்றோம்.

இந்த பதிவர் சந்திப்பை பற்றிய மேலதிக தகவல்களை நிரூஜா, வதீஸ், அனுதினன்,வரோ, அஷ்வின், பவன். ஆகிய ஏற்பாட்டு குழு அங்கதவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். வெளியூரிலிருந்து வந்து கலந்து கொள்ள விரும்புவோரில் தங்குவதற்கு இடவசதி தேவைப்பட்டால் 13ம் திகதிக்கு முன்னதாக அஷ்வின்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கைத் தமிழ் பதிவர் சந்திப்பு 2010 இற்கு Earthlanka நிறுவனத்தினர் அனுசரணை வழங்குகின்றனர் என்பதை நாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.