twitter


இந்தப் பதிவும் கடந்த வருடம் கல்லூரி ‘களச் செய்திச் சேகரிப்பின்’ போது எழுதப்பட்டது.

இப்போது எங்கு பார்த்தாலும் பாஸ்ட் பூட்ஸ்! நாவுக்கு சுவையான உடனடி உணவு! அதே போல பாஷன் எடியுகேஷன் கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? “எல்லோரும் சாதரண தரம் படிக்கின்றார்கள். உயர்தரம் படிக்கின்றார்கள். எனக்கு எல்லாம் அவ்வாறு அதிக காலத்தினை வீணாக்க முடியாது. குறைந்த காலங்களில் கல்வி கற்று வேலை பெறுவதே எனது நோக்கு” என்றான் 15 வயதை உடைய றமணன். அதே வயதுடைய மாணவர்களை சந்தித்த போது எட்வேட் எனும் மாணவனும் றமணனது வார்த்தையை வழிமொழிவது போல் கூறினான்.

பொருள் உற்பத்தியிலும் நீண்ட கால பாவனையை விட குறுகிய கால பாவனைக்கு ஏற்ற வகையில் தரமான பொருளாக இருப்பின் ஏற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது. அவ்வாறே கல்வி முறையிலும் மாற்றங்கள் உருவாகி விட்டன. ஒரு வயதுத் தரவளியான மாணவர்களை சந்தித்த போது இது சார்பாக கருத்துகள் தெரிவித்தனர்.

காலங்கள் மாறி உள்ள வேளை அதற்கேற்ப சமூகங்களும் மாறியுள்ளன. மனிதர்களது தேவைக்கு ஏற்ப குறுகிய கால தொழில் கல்வி பெறக்கூடிய கல்வி நிறுவனங்கள் பல தோற்றம் கண்டுள்ளன. எவை எவ்வாறு செயல்படுகிறது. என நோக்கிய போது சில உண்மைகள் தெரிய வந்தன. இவை குடிசை கைத்தொழிலிற்கு நிகராக இயங்குவதை காணலாம். அன்றைய குடிசை கைத்தொழிலும் சிறு சிறு வீடுகளில் சிறிய சிறிய இடங்களில் கைத்தொழில் இடம் பெற்றது. அதேபோல இன்று சிறு சிறு இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல தொழிற் பயிற்சி கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறான இடங்களில் கணனி, ஆங்கிலம், சட்டம், தாதி, முகாமைத்துவம், கணக்கியல், பொருளியல், வைத்தியம் மற்றும் மொழிக்கல்வி என பல கல்விகள் கற்றுக் கொடுக்கின்றனர். கணனி கல்வியிலும் ஆங்கில கல்வியிலும் எண்ணில் அடங்காத கல்வி நிலையங்கள் அதிகமாகவே உள்ளன. “தொழிற் கல்வி நிலையங்கள் எவ்வாறு அதிகரித்துள்ளது எனின் இளம் தலை முறையினர்களுக்கு கல்வி அறிவினை வழங்கி வாழ்விலே முன்னேற்றுவதற்கான ஒரு களமே இந் நிறுவனங்கள்” என்கிறார் கணனி ஆசிரியர் பிரதாப். இன்னும் ஒரு நிறுவனம் அதிகாரியான டேவிட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது வயது 44) “முதலில் வருமானம் பின்னர் தான் மாணவரது செயல்பாடு அனைத்திற்கும் முன்னுரிமை”. “லாப நோக்கோடு கூடிய மாணவனது கல்வி நிலைக்கு முன்னுரிமை அளிக்கின்றோம். மாணவர்கட்கு நாம் கேட்கும் பணத்தொகை பெரிது அல்ல. அவர்கள் வெளிநாடு சென்று சில கால வேளைகளிலே எமக்குத் தரும் பணத்தினை சம்பாதித்து விடுவார்கள்” என்கிறார் இன்னொரு நிறுவன இயக்குனர் கிருஸ்ணவேணி.

“ஏதோ சில காரணங்களுக்காக சில மாணவர்களது பாடசாலைப் பருவத்திலே கல்வி குழம்பி விடுகின்றது. அதற்காக அவருடைய வாழ்க்கை பாதிப்படைந்து விட்டது என விட்டு விடுவதா? அவர்களை நல்லதொரு கல்வியாளனாக ஆக்க வேண்டும். நான் கூடத் தான் உயர்தரம் மட்டும் படித்தேன் ஆனால் இப்போழுது எனது நிலை எங்கே இருக்கின்றது. நான் இப்போ ‘கோட், சூட்’ போடுகிறேன் எனின் எனக்கு அந்நாளில் நல்லதொரு நிறுவனம் கல்வி கற்க அனுமதித்ததால் தான் இப்போது கௌரவமாக உள்ளேன்”. என்கிறார் 40 வயதையுடைய காசிஸ் ஆங்கில ஆசிரியர்.

“மாணவர்களுடைய கல்வித் தகைமை முக்கியமில்லை. அவர்களுக்கு வேண்டிய சகல சான்றிதழ்களும் நாமே செய்து கொடுக்கின்றோம். எங்களுக்கு மாணவர்கள் பணம் மட்டும் தந்தால் போதுமானது” என்கிறார் வெளிநாட்டிற்கு பயிற்சிக்காக அனுப்பும் 78 வயதையுடைய கல்வி ஆசிரியர். “சான்றிதழ் என்பது காலனித்துவ நாடுகளில் தான் முக்கியம் பெறுகிறது. சான்றிதழ் ஒரு வைரஸ் நோய்” என்கிறார் கணனி ஆசிரியர். பாடசாலை அதிபர் ஒருவர் இதனை முற்றாக மறுக்கிறார். “ஓர் உத்தியோக ப+ர்வமாக மாணவனது திறமைக்கு வழங்குவது தான் சான்றிதழ். திறமையல்லாத மாணவர்கட்கு சான்றிதழ் வழங்கினால் திறமையுள்ள மாணவனிற்கு திறமையில்லாத மாணவன் நிகராகி விடுவானா?” என்கிறார் 56 வயதையுடைய வெள்ளவத்தை பாடசாலை அதிபர்.

கண்டிப்பாக எல்லோரும் படிக்க வேண்டும் அதுவும் பல்கலைக்கழகம் வரை சென்று படிக்க வேண்டும் அப்படிப் படித்தால் தான் கௌரவம் எனின் நமது நாட்டிலே அனைத்து மாணவர்களும் கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாது. ஏனெனில் அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழகம் ஏற்க மாட்டாது. ஏனைய மாணவர்கள் ஏதாவதொரு துறையில் முன்னேற வேண்டும் அதற்கு எந்;தத் துறை தனக்கு ஏற்ற வகையில் அமைகின்றது என தேடுகின்றான். அதற்கேற்ற வகையில் கல்வி கற்கவும் முனைகின்றார்கள் இன்றைய மாணவர்கள். “ஜப்பானில் கல்விகளை பாடமாகவும், தொழிற் பயிற்சியாகவும் கற்றுக்கொடுக்கின்றனர். அதே முறையினைத்தான் நாமும் இங்கு கடைப்பிடிக்கின்றோம். அதில் வெற்றியும் பெறுகின்றோம். மாணவர்கட்கும் அவ்வாறு கற்பதில் தான் ஆர்வம் உள்ளது”. என்கிறார் 65 வயதையுடைய கல்லூரி பணிப்பாளர்.

“வீதியில் ஏனோ தானோ எனத் திரிபவர்களும், விணான சண்டை சச்சரவிற்குள் உள்ளாகுபவர்களும் இவ்வாறு திரிந்து மதுபானைக்கும், போதை வஸ்துகளுக்கும் அடிமையாகாமல் வேறு தீய பழக்கத்திற்கும் உள்ளாகாமல் இருப்பதற்கும் இவ்வாறான கல்விகள் பயன்படுகின்றன. தொழிற்கல்வியிலே காலம் செல்வதனால் இவ்வாறான தீய வழிக்கு செல்லாது தடுக்கக் கூடியதாக உள்ளது” என சமூகத்தின்; ஆர்வலரான கணபதி கூறுகின்றார்.

“வகுப்பில் அந்த பையனைக் கண்டாலே எனக்கு கோபம் தான் வரும். கல்வி கற்று கொடுத்தாலும் கூட அவன் மண்டையில் எதுவும் ஏற்றிக் கொள்ள மாட்டான். நான் அவனுக்கு எத்தனை அடி அடித்துள்ளேன். முன்னேறவே இல்லை. இப்போ நான் ஒய்வு பெற்று விட்டேன். எனது கல்வி நிலையத்திலேயே பெரியதொரு பதவியை பெற்றுள்ளான் அம் மாணவன். அவனுக்கு தொழில் நுட்பத்திலேயே அக்கறை இருந்துள்ளது. தொழில் கல்வி நிறுவனம் சந்தர்ப்பம் வழங்கியதால் அம் மாணவனிற்கு நல்லதொரு வாழ்வு கிடைத்தது” என்கிறார் 65 வயதை உடைய ஞானசாரியார் பாடசாலை ஆசிரியர் நாராயணசாமி.

பாடசாலை கல்வி கற்று பல்கலை கழகம் செல்ல வேண்டும். அவ்வாறு கல்வி கற்றால் தான் ஒரு படிப்பு என அன்றைய காலத்தில் எண்ணினார்கள் ஏன் இன்று கூட அவ்வாறு தான் கிராமங்களில் எண்ணுகின்றனர். கல்வி என்பது ஒரு நேர்கோடு இல்லை. அது பல கிளை விட்டு செல்லும் ஆலமரமாகும் ஆகவே கல்வியினை பலவிதமாகவும் கல்வித் தன்மைக்கு ஏற்ற வகையியலும் கல்வி பயிலலாம் என தொழிற் கலவி நிலையங்கள் காட்டி நிற்கின்றன. எல்லோரும் அரசாங்க உத்தியோகம்தான் பார்க்க வேண்டும் என்பது இல்லை. பல்வேறு பட்ட தொழில் கல்வி நிறுவனங்கள் தோன்றி உள்ளன அதன் மூலம் பல்வேறு தொழில் வாய்ப்பினை பெற்று தன்னையும் வளர்த்து சூழ உள்ளவர்களையும் வளர்க்க முடியும.;

தொழிற்கல்வி நிலையங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பெரிய ஒரு நிறுவனத்தின் அதிகாரியான தயாநிதிமாறன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகின்றார். “நவீன முறையுடனாக அமைந்திருக்க வேண்டும். அதாவது கணனி வசதிகள் நிறைந்த பாட வசதிக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்க வேண்டும். அது மட்டும் அல்லாது புதுப் புது தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்திருக்க வேண்டும். முக்கியமாக இட வசதி போதுமானதாக அமைந்திருத்தல்”. “அத்தியாவசிய தேவை என்ன எனின் சாதாரண உயர்தரம் படித்து விட்டு பெறுபேறிற்காக சிறிது காலம் காத்திருக்கும் சமயத்தில் அவர்கட்கு ஆலோசனை வழங்கும் ஆலோசகர்கள் நிறுவனங்களிலே இருக்க வேண்டும். அவ்வாறெனின் மாணவர்கள் எக்கல்வியினை எவ்வாறு படித்தால் மாணவருக்கு உதவியாக இருக்குமென ஆலோசகர்களை நிறுவனத்தில் வைத்திருத்தல் வேண்டும்” என்கிறார் பாடசலை விஞ்ஞான ஆசிரியர் தயானந்தன்.

“எமது நிறுவனத்திற்கு தொழிற்கல்வி பெறுவதற்கு வந்துவிட்டான் அவனிற்கு ஏதோ கற்றுக்கொடுப்போம் என்று சிந்திக்காது பணத்தினைப் பெற்று விட்டோம் அதற்கேற்றவாறு அவனுக்குத் தேவையான தொழிற் பயிற்சிக் கல்வியினை வழங்குவோம் என சிந்தித்து அம்மாணவர்கட்கு மகிழ்சிசியுடன் கற்பித்தலை அழிக்க வேண்டும் மாணவனையும் மகிழ்ச்சியுடன் கல்வியில் ஈடுபட வைக்க வேண்டும்” என்கிறார் 32 வயதையுடைய சுரேஸ்;.

“இதே நிலையில் கல்வியை கை விட்டவர்கள் வாழ்க்கையில் உச்சம் பெறுவதற்கும் அவர்களது குறுகிய காலத்திற்கு தொழிற்பயிற்சிக் கல்வி வழங்குவது நன்மையானதும் கட்டாயமானதும். ஆரம்பத்தில் சாதனை படைப்பதாக எண்ணும் தொழிற் கல்வி நிலையங்கள் தோன்றுகின்றன ஆனால் காலப்போக்கில் ஏனோ தானோ என செயல்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது” என சமூகத்தில் அக்கறை கொண்ட பெண்ணொருவர் ( பெயர் குறிப்பிட விரும்பாத). மாறி வரும் கல்விக்கும், வேலைக்கும் கல்வி விரிவாக்கம் மாறுவது முக்கியமானது. வாழ்க்கைக்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டு வருதல் மாற்றங்களுக்கு ஏற்ப வாழும் தன்னம்பிக்கை இருத்தல் வேண்டும் இன்றைய வாழ்க்கை கூட மனிதனது ஒவ்வொரு நகர்வும் தனி மனித விருத்திக்கும சமூக விருத்திக்கும் கால் கோலாக அமைய வேண்டும்.


“பிள்ளையள் எங்களுக்காக அனுப்பினம் நாங்கள் செலவளிக்கிறம். இதில என்னத்தைப் பார்க்கிறது” என்று கூறினார் திலகவதி. இப்படித்தான் எத்தனையோ பேர் தங்களை அறியாமல் பணத்தினை செலவளித்து கொண்டு இருக்கின்றார்கள். வெள்ளவத்தை பகுதியில் அதிகமான யாழ்ப்பாணத்தவர்களே வசிக்கின்றார்கள். அதிகமானோர் வெளிநாடு செல்வதற்காகவும் வெளிநாட்டு வருமானத்துடன் வெளிநாட்டையே மையமாக வைத்து வாழ்கின்றார்கள். வருமானமானது அதிகமாகவே கிடைப்பதால் பொருட்களின் விலைகளைப் பொருட்படுத்துவது இல்லை.

நகரத்தை நோக்கி வந்தவர்களில் அதிகமானோர் கிரமவாசிகள் தான். அங்கு அவர்களின் வாழ்க்கை முறையானது முற்று முழுவதாக மாறுபட்டதாகத் தான் இருக்கும். வாழ்க்கைச் செலவானது குறைவாவே காணப்படும். ஒரு புது உடுப்பு எடுக்க வேண்டும் எனின் தைப்பொங்கல் அல்லது வருசம், தீபாவளிக்கு காத்து கொண்டு இருப்பார்கள். ஏதாவது செலவு செய்ய வேண்டிய தேவை இருந்தாலும் ஆயிரம் தடவைகள் யோசிப்பாகள. ஆனால் அவர்களே நகரத்தை நோக்கி நகரும் போது நடைமுறையுடன் இயல்பாகவே ஒன்றி விடுவார்கள். இதற்கு காரணம் ஒன்று புதிய கலாச்சாரங்களின் வருகை மற்றயது அதிகரித்த வெளிநாட்டு பணமும்தான்.

சுவாதி கூறுகையில் “என்னுடைய கணவர் எனக்காக காசு அனுப்பும் போது நான் ஒன்றுக்கும் யோசிக்கத் தேவை இல்லை”. இப்படித்தான் எத்தனையோ பேர் செயற்பட்டு கொண்டு இருக்கிறார்கள். நல்லதொரு உதாரணம் வெள்ளவத்தையில் மற்றைய இடங்களுக்களுடன் ஒப்பிடுகையில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகமாகவே காணப்படுகின்றன. புறக்கோட்டையில் 7 தோடம்பழம் 100 ரூபாய் வெள்வத்தையில் 1 தோடம்பழம் 30ரூபாய். நாரகேன்பிட்டி அரச வணிக சந்தையில் 1 கிலோ கத்தரிக்காய் 20 ரூபாய், வெள்ளவத்தையில் 80 ரூபாய்.

“எங்கட பிள்ளைகள் 4 பேரைப் போல வெளிநாடு போக வேணும் தானே இதுக்கெல்லாம் காசைப்பாக்க ஏலாது. இது ஊரில்லயே” என்கிறார் பிருந்தா. புதிய புதிய நாகரீகங்களின் வருகை அத்தோடு ஒன்றிப் போகும் மக்களும் கலாச்சாரத்திற்கும் முகம் கொடுக்க பணம் தேவை அது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. விலைகளை சரியாக அறிந்து கொள்ள முடியாமல் கேக்கிற பணத்தை கொடுகின்றார்கள். இதற்கு முதல் பிரச்சனையாக இருப்பது மொழிப் பிரச்சனை தான். சிங்களம் தெரியாத காரணத்தால் சரியான முறையில் கொடுக்கல் வாங்கல்களை செய்ய முடியாது உள்ளது.

இன்னொரு பிரச்சனை அவர்கள் பணத்தை கொட்டிக் கொடுப்தால் விற்பனை செய்பவர்களும் இவர்களிடம் பணத்தை கறக்கலாம் என கூட விலைகளைச் சொல்வார்கள். வேறு இடங்களிற்குச் சென்று வாங்குவதற்கும் அவர்களுக்கு போக்குவரத்து பிரச்சனையாகவே உள்ளது. வருமானத்தை விட அதிகமாகவே செலவு செய்கின்றனர். வெளிநாடுகளிலிருந்து உறவுகள் அனுப்பும்; பணத்தை தங்களுடையது என்று சரியாகத் திட்டமிட்டுக் கொள்வதில்லை. இதனால் வரவை விட செலவு அதிகமாகவே உள்ளது. அதிகமாகக் பணம் வருவதால் இவர்களுக்கு அது தெரிவதில்லை. மாதம் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்பவர்கள் கூட இருக்கின்றார்கள். (ஒருவருக்கான பணம்)

இதற்குக் காரணம் அவர்களுடைய தேவைகளை சரியாக முக்கியத்துவப்படுத்தி செலவு செய்வதில்லை. சொப்பிங் என்று சொல்லி, போய் எல்லாப் பொருட்களையும் வாங்கி வருகின்றார்கள். இவர்கள் கிராமங்களிலிலிருந்து வந்த நடுத்தரவர்க்க வகுப்பு குடும்பங்கள் தான். ஆனால் இன்னொரு வர்கமும்; உள்ளது. அதாவது உயர் வர்க்க வகுப்பினர் தங்கள் வருமானத்திற்கு ஏற்ற மாதிரி விலை கூடிய இடங்களில் கொள்வனவு செய்வார்;கள் அவர்களை இதற்குள் உள்ளடக்க முடியாது. வெள்ளவத்தையில் உள்ள வெளிநாட்டுச் செலாவனியை நம்பியுள்ளோரின் ஒட்டு மொத்த கருத்தாக இருப்பது இது ‘எங்களுடைய பணமல்ல அதனால் எப்படியும் செலவழிக்கலாம்’ இனி வரும் காலத்தில் இது பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக கிருலப்பனையிலுள்ள ஒருரைக் கேட்ட போது அவர் கூறினார் “வெள்ளவத்தையில் வெளிநாட்டுக்காரர் தான் இருக்கின்றார்கள்”; குண்டூசியில் இருந்து குளிரூட்டி வரை எல்லாம் 3 மடங்கு விலையாகத்தான் உள்ளது”. இப்படி ஒரு கருத்து காணப்படும் போது அதை அங்குள்ள மக்கள் தான் கவனத்தில் கொள்ள வேண்டும். வெள்ளவத்தை என்றாலே அது குட்டி யாழ்ப்பாணமாகவே உள்ளது. நுகர்வின் போது நுகர்வோர்கான பொறுப்பு இருக்கின்றது. இதை அவர்கள் சுயமாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

பி.கு : நட்சத்திர வாரத்தில் நான்கு நாள் இடுகை இடாமல் விட்டுவிட்டேன். எல்லாத்துக்கும் அதிகரித்த வேலைப்பளு தான் காரணம். எனவே மன்னியுங்கள். இனியும் பதிவெழுதாமல் ஏமாத்தாமல், இந்தப் பதிவு. கடந்த வருடம் ‘களச் செய்திச் சேகரிப்பின்’ போது கல்லூரிக்காக எழுதப்பட்டது.


பதிவர்களை ஊக்குவிக்கும் யாழ்தேவி திரட்டியின் இவ்வார நட்சத்திரமாக என்னை அறிவித்திருக்கிறார்கள். அதற்கு முதலில் யாழ்தேவிக்கு நன்றிகள். பொழுது போக்காக ஆரம்பித்த வலைப்பதிவில், நாட்கள் செல்லச் செல்ல சில விடயங்களை எழுதியே ஆக வேண்டும் என ஆரம்பிப்பேன். பதிவாக வரும்போது நான் சொல்ல நினைத்ததில் அரைவாசி தான் இருக்கும்.காரணம், என் பதிவுகளை வலையில் இட முதல் நண்பர்களிடம் காட்டுவேன். "ஊடகத்தணிக்கை" எனும் பெயரில் பல இடங்களை நீக்கி விடுமாறு கூறுவார்கள். மனம் அதற்கு உடன்படாவிடினும், கை உடன்படும். ஊடகவியாலாளனுக்கு முக்கியம் செய்தியல்ல, உயிர். இதனால் இன்று வரை நான் இடும் பதிவுகளில் எனக்கு நூறு வீதத் திருப்தி இல்லை.

நட்சத்திர வாரத்தில் பதிவுகளை தொடர்ச்சியாக இட முயற்சிக்கின்றேன். முடியாது போனால் பொறுத்தருள்க.

மண் குதிரைக்கு சமனான தென்னிந்திய நடிகர் சங்கம்

மண்குதிரையை நம்பி ஆத்தில போனால் என்ன நடக்கும் தெரியும் தானே! அதே மாதிரி தென்னிந்திய நடிகர் சங்கம் (தமிழ்) இருக்குது. நடிகர் சங்கத்தில யார் சொல்லுறது சரி. யார் உண்மையான தீர்மானங்களை எடுப்பவர்.? எவர் சொல்லுறதை நம்பலாம் எண்டு தெரியாமல் கிடக்கு. ஆளாலுக்கு பத்திரிகை காரங்களைக் கூப்பிட்டு பேட்டி குடுக்கிறாங்க. பிறகு எல்லாரும் சேர்ந்து கதைக்கிறாங்க. என்ன நடக்குது உங்கை?

இப்பிடித் தான் புவனேஸ்வரி விவகாரத்திலயும் பொங்கி எழுந்து, பத்திரிகைக் காரங்களுக்கு எதிரா கூட்டம், ஆர்ப்பாட்டம் எண்டு கலக்கினாங்க. பிறகு ரஞ்சிதா விவகாரத்தில பெட்டிப் பாம்பா அடங்கிட்டாங்க. அதே மாதிரி ஐஃபா வை காரணம் காட்டி இந்திய திரையுலகத்தையே புறக்கணிக்கக் கூப்பிட்டாங்க. குறைந்த பட்சம் தமிழ் சினிமாக் காரங்களை தன்னும் தடுத்தாங்க. பிறகு இலங்கைக்கு காலடி வைக்க நினைச்ச லியோனி, சுப்பர் சிங்கர்ஸ் ஜூனியர், சீனியர் எண்டு எல்லாரையும் மடக்கினாங்க. ரத்த சரிதம் படத்தை போடவிடாமல் பண்ணுவாங்க எண்டு நினைக்கும் போது, ஐஃபா செத்துப்போச்சு எண்டாங்க. இப்பிடி பல கதை சொல்லுவாங்க.

கடைசில அம்பிட்டது அசின், ஆளாளுக்கு கருத்து தெரிவிச்சாங்க. தமிழ் சினிமாவே நடிக்க விடமாட்டம் எண்டு துள்ளிக் குதிச்சாங்க. கடைசியா எல்லாரும் சேர்ந்து நேற்று கூட்டம் போட்டு கதைச்சு தொழில் மற்றும் தனிப்பட்ட விடயமா போறவங்க போகலாம் எண்டு பச்சைக் கொடி காட்டினாங்க. இதை முதல்லயே செய்திருக்கலாமே! நீங்க தமிழ்ல தடை செய்யலாம், அதுக்காக ஹிந்தில நடிக்க விடாம செய்யேலுமோ. இல்லைத் தானே! எதையும் பிளான் பண்ணி செய்யுங்கோ, இல்லாட்டி இப்படித் தான் ஆளாளுக்கு பந்தாடுவானுகள்.

அசின் யாழ்ப்பாணம் வந்தவாவெல்லோ, படங்களைப் பாருங்களன்.நம்மளுக்கு உள்ள பிரச்சினையையே தீர்க்க காணல, இதில புதுசா வேற பிரச்சினை வந்தா?

எப்ப நம்ப 'மெயில்' பறிபோகும்... 'பேஸ்புக்' பறிபோகும்... 'புளொக்கர்' பறி போகும்... எண்டு யோசிக்கிறதிலையே அரைவாசி நேரம் போயிடுது.

'நெற்வேர்க் கனெக்ஸன்' பிரச்சினையால, 'மெயில் ஓப்பன்' பண்ணுறதில சிக்கல் வந்ததாலும், கொஞ்ச நேரத்தில மனசு பதறிடுது. அப்பிடி 'மெயில் ஹக்' பண்ணுப்பட்டாத் தான் என்ன? உயிரா போச்சுது? எண்டு நினைச்சு பதறாமலும் இருக்கேலாமல் கிடக்கு. எதைக் கொண்டு வந்தோம் அதை இழப்பதற்கு? என யோசிச்சாவது மனசை ஆசுவாசப்படுத்தலாமெண்டா, பாழாய்ப் போன அது கேக்குதில்லை.

எங்களைப் போல ஆக்களின்டை 'எக்கவுண்டுகளை ஹக்' பண்ணுறதால என்ன லாபம்? நாங்க என்ன பில்கேடஸ்ஸோட ஒண்ணு விட்ட சகோதரமா? அல்லது அம்பானியோட அக்கா பிள்ளைகளா? அட! அவ்வளவு ஏன், பொன்சேகாவோட சொந்தக்காரங்களா?

பின்ன ஏன் 'ஹக்' பண்ண வெளிக்கிடுறாங்க? "நீ எழுதக் கூடாது...!", அதுக்கேனய்யா முளையைக் கசக்கி 'ஹக்' பண்ணுவான். நானே எழுதாமப் போறனே! நீ சந்தோஷப்படு.

என்னோட நண்பர் ஒருத்தர் அடிக்கடி சொல்லுவார், "அட! நாசமாப்போன யாராவது என் புளொக்கரை ஹக் பண்ணுங்களண்டா... இதால எவ்வளவு தொல்லை. நீங்களும் ஹக் பண்ணுறீங்க இல்ல. நானும் எழுதுறதை நிறுத்திறன் இல்ல. ஏதாவது ஒண்டு நடந்தாக் கூட மற்றவன் பேசாமல் இருக்கலாம்".

இப்பிடி ஒவ்வொரு ஆட்களும் பலவிதம்.

இந்தியப் பதிவர் ஒருவரான சூர்யா கண்ணனின் வலைப்பதிவு 'ஹக்' பண்ணுப்பட்டதை அறிந்தேன்.
ஒட்டு மொத்தமாக அவரது பல கணக்குகள் பறிபோய் விட்டனவாம். எனவே பதிவர்கள் விழிப்பாகவும் உஷாராகவும் இருங்கள்.

என்னோட புளொக்கர் 'ஹக்' பண்ண முதல் சொல்லுங்க, நானே எழுதாமல் விடுறன். உங்களுக்கேன் வீண் சிரமம்.


இலங்கையில் ஒரு வருடத்துக்கு முன்னர் பொலிஸாரின் ஆதிக்கமே கையோங்கி காணப்பட்டது. இவர்கள் என்ன செய்தாலும் அவர்களை திருப்பி கேள்வி கேட்க முடியாது. அது மட்டும் அல்ல எங்கள் கேள்விகளையும் கேட்கவும் முடியாது. பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் கைது செய்வதும், மக்களை பரிசோதனை செய்வதும், அடையாள அட்டைகளை பார்ப்பதும், பின்னர் அதனை வேண்டி வைத்து விட்டு பொலிஸ் நிலையத்திற்கு வரும்படி கூறுவதும், முன்னுக்கு பின் முரணான கேள்விகள் கேட்பதும், சந்தேகம் எனும் பெயரில் கைது செய்வதும் அவர்களது கடமைகளாக காணப்பட்டது.

இப்போது அவர்கள் என்ன செய்கின்றனர் என என் கண்ணால் தெரிந்ததையும் காதால் கேட்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவை யாவும் உங்கள் கண்ணுக்கும் புலப்பட்டு இருக்கும் என நம்புகிறேன்.

பொலிஸாரினால் இலங்கையின் பல பாகங்களிலும் போதைவஸ்துக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளினை தடை செய்வதை மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருவதனை நாம் ஊடகங்கள் மூலம் அவதானிக்க கூடியதாக உள்ளது. அதில் அவர்கள் வெற்றி பெற்று வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. பொலிஸின் இந்த நடவடிக்கைகளினால் போதைப் பொருட்களிற்கு மக்கள் அடிமைப்படுவதனை ஓரளவேனும் தடுக்கக் கூடியதாக உள்ளது. எனினும் சில மக்களின் அன்றாட பாவனைகளில் போதைப்பொருட்களும் பாவனையில் எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.

அது மட்டும் அல்லாது அங்கீகாரம் பெறப்படாத கருச்சிதைவு மையங்கள் பல பொலிஸாரின் புலனாய்வுப் பிரிவால் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றிற்கு சீலும் வைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்ககப்படாத எத்தனையோ கருச்சிதைவு மையங்களை நிறுவுவதனை தடுத்து நிறுத்துகின்றனர். (உ-ம்)(அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு முற்றுகை) அங்கீகரிக்கப்படாத கருச்சிதைவு நிலையங்கள் நிறுவுவதனால் முறையான சிகிச்சை முறை இல்லாது செய்யும் சிகிச்சை முறையினால பல உயிர்கள் இறக்க நேரிடுகின்றன. தகாத முறைகளில் உறவுகளினை வைத்திருப்பதற்கு துணிவுடன் இறங்கி விடுவார்கள்.. இவை எதுவும் நேர விடாமலும் கலாசார சீரழிவுகள் ஏற்படாமலும் நல்லொழுக்கங்களை கட்டி காப்பாற்றுவதிலும் கவனம் செலுத்தி அதனை வளரவிடாது அவற்றினை பொலிஸார் முற்றுகையிடுவது வரவேற்கப்பட வேண்டியவை.

ஆறுகள், கடல்கள் நிறைந்த இடங்களில் அனுமதி இல்லாது மண் அகழ்வுகளினை மேற்கொண்டு வருகின்றனர். இதனையும் பொலிஸ் தடுத்து நிறுத்துகின்றனர். ஆறுகளில் கடல்களில் மணல்களை அகழ்கின்;றார்கள் எனின் சுற்றிவர உள்ள மக்களிற்குத்தான் பாதிப்பு. அந்த பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் வளங்களை காப்பாற்றி வருகின்றனர். இவையும் வரவேற்கப்பட வேண்டியவைதான்.

நாட்டின் பல பாகங்களிலும் காதல் ஜோடிகளை கைது செய்கின்றார்கள். பொது இடத்தில் கட்டிப்பிடிப்பதோ, முத்தமிடுவதோ தவறு எனக் கூறுகிறார்கள். இன்னொரு பக்கத்தில் “எங்களுக்கு இதற்கு கூடச் சுதந்திரமில்லையா?” என காதலர்கள் புலம்புகின்றனர்.

இவ்வாறு நல்ல பக்கங்கள் இருந்தாலும் இவர்கட்கு இன்னொரு முகமும் உள்ளது. அதனையும் பார்த்து விடலாம். (அண்மையில் வெளிவந்த குற்றப்பிரிவு படம் போல்த்தான்)

வெள்ளவத்தையில் பொதுவாக சனநெருக்கடி அதிகம். இதனால் ரஃபிக் பொலிஸினை அதிகளவாக அங்கேதான் குவித்தும் உள்ளனர். இதற்குள் பொலிஸார் ஒரு மோட்டபைக்கை கொண்டு அங்கும் இங்கும் ஓடித்திரிவார்கள்.

நீண்டதூர பயண வாகனங்களை மட்டும் அல்லாது மோட்டபைக் மற்றும் சிலர் வீதி விதிகளை மாறி பயணித்தால் கூட நிறுத்தி லஞ்சம் வாங்குவதனை கண்கூடாக பார்க்கக்கூடியதாக உள்ளது. முன்னர் லஞ்சம் வாங்குவது லைசன்ஸ் புத்தகங்களிற்கு உள்ளே வைத்து கொடுப்பார்கள் ஆனால் தற்போது அப்படி ஒன்னும் இல்லை. நேரடியாகவே எல்லா மக்களும் பார்க்கக்கூடிய விதத்தில் பணத்தினை வாங்குகின்றனர்.

வாகன ஓட்டுனர்களும் சிறிது நேரம் பேரம் பேசி (சந்தையில் பேரம் பேசுவது போல) பின்னர் திருப்திப்படாமல் பணத்தினை வழங்கி விடுகின்றனர். அவர்களிடம் சென்று ஏன் இப்படி அநியாயமாக பணத்தினை வழங்குகிறீர்கள் என கேட்டால் “பொலிஸ் ஸ்ரேசனும் போஸ்ட் ஒபீசுமா அலைய வைப்பான்கள் வேலைக்கும் போக முடியாது இழுபட்டு கொண்டே இருக்க வேணும் அதைவிட அவன்கள் கேட்கும் பணத்தினை குடுத்திட்டம் எனின் ஓடுப்பட வேண்டிய அவசியமும் இல்லை வேறு பிரச்சினை வராது.” என்கின்றனர் பல பேர். மக்களின் இந்த அலட்சிய போக்கே நாட்டிலே லஞ்சம் வளர்வதற்கு அடிப்படை காரணமாக உள்ளது. மக்கள் உஷார் நிலையில் இருந்தார்கள் எனின் லஞ்சத்தினை ஒழிக்கலாம் பொலிஸ் எனின் லஞ்சம் என முத்திரை குத்துவதை விட அம் முத்திரையை உடைக்க வேண்டும் எனின் மக்களாகிய நாங்கள் தான் லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறான இடங்களில் மட்டும் அல்ல எந்தவொரு வேலையும் பொலிஸ் மூலம் நடைபெற வேண்டும் எனின் அதிகளவானோர் (98மூ) பணத்தினை கொடுத்துதான் காரியங்களை செய்கின்றனர். இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதற்கு காரணம் (அதிகளவானோரின் கருத்துப்படி) “உடனே காரியம் ஆகவேண்டும் பணத்தினை வழங்கினால் உடனே செய்து முடித்து விடலாம். இழுபட்டுக் கொண்டு இருக்காது. பிரச்சினையும் வராது என எண்ணுகின்றனர்.” இவ்வாறு மக்களின் சிந்தனை சென்று கொண்டு இருந்தால், நாடு லஞ்சத்தினால் முன்னேறி விடும்.

பொலிஸ் என்ற தற்துணிவை பயன்படுத்தி எதுவும் சாதிக்கலாம் என எண்ணுகின்றனர். மருதமலை படம் எல்லோரும் பார்த்து இருப்பீர்கள் அதில் பிச்சைக்காரனுக்கு நிகராக வடிவேல் லஞ்சம் வாங்குவார். (அப்போது எல்லோரும் சிரித்து இருப்போம் ஆனால் நிஜத்தில் அவ்வாறு நடந்து இருக்கும் எனின்) லஞ்சம் வாங்கும் பொலிஸினை பிச்சைகாரனுடன் ஒப்பிடப்படுகின்றார்கள். அவ்வாறு எனின் பொலிஸ்காரர்கள் எல்லாம் அவர்களா?

இலங்கையிலே ஐந்து தொழில்கள் மிகவும் உன்னதமானது. அதிலே பொலிஸ் வேலையும் உள்ளடங்கலாக. மருத்துவர்கள், வக்கீல்கள்… இவர்கட்கு சமனானதுதான் பொலிஸ் தொழிலும். ஆனால் அத் தொழிலை பல பொலிஸ்காரர்களால் தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான சில காரணங்களினால்தான் இத் தொழிலிற்கு மதிப்பு இல்லாமல் போகுது. வெளிநாடுகளில் பொலிஸ் வேலை எனின் நல்ல மதிப்பு. ஆனால் இலங்கையில்……..

இவ்வளவு காலமும் பொலிஸ் தொழில்தான் லஞ்சம் பெறுவதில் முதலிடம் வகித்து வந்தது. இப்போ அது கல்வியை முன்னுக்கு தள்ளி விட்டு தான் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.யாருக்கும் சவால் விடப் போறனோ எண்டு நினைச்சிடாதீங்க, இது எனக்கு அண்மைக்காலத்தில் மிகவும் பிடித்த பாட்டு.

மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ராவணன் திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே அனுபவித்துப் பாடிய பாடல்.

பொதுவாக முன்னைய காலங்களில் படங்களின் எழுத்தோட்டத்தை ஆரம்பத்திலேயே காட்டி விடுவார்கள். இப்பொழுது தமிழ் சினிமாவிலும், ஆங்கிலத் திரைப்படங்களைப் போல படம் முடிந்த பிறகு தான் படத்தின் தூண்களின் பெயர்களைக் காட்டுகிறார்கள். அதை யார் பார்க்கப் போகிறார்கள்.

ராவணன் இறுவட்டில் இல்லாத பாடலொன்று படத்தில் இடம்பெற்றுள்ளது. "நான் வருவேன்.. மீண்டும் வருவேன்.." அதற்காகவே தியேட்டரில் எழுத்தோட்டம் முடியும் வரை நின்று பார்த்தேன்.

இது இயக்குனரின் தந்திரமா?

என்ன செய்வது? நீங்களும் தியேட்டரில் பார்க்காத எழுத்தோட்டத்தை இங்கே பாடலுடன் பாருங்கள்.
வணக்கம் பதிவுலக நண்பர்களே!

இன்று உலகச் சுருங்கி விட்டது. அச்சு ஊடகங்களை விட இலத்திரனியல் ஊடகங்களும், இணையங்களும் மக்களை ஆட்டுவிக்கின்றன. குறிப்பாக இணைய எழுத்தாளர்கள். நம் சிந்தனையில் தோண்றும் எண்ணங்களை எழுத்து வடிவில் கொண்டு வந்து அதனை வாசகர்களின் கைகளில் வலைப்பதிவுகளாக விட்டு விடுகின்றோம். பிடித்தால் பாராட்டுக்களையும் பெற்றுக் கொள்கின்றோம். இல்லாவிட்டால் உடனடித் திட்டுக்களையும் பெற்றுக் கொள்கின்றோம்.

இணையத்தில் ஏதோ கிறுக்கத் தொடங்கியவர்களில் பலபேர் கைதேர்ந்த எழுத்தாளர்களாக இன்று மாறியதனையும் மறுக்க முடியாது. என்னதான் இணையத்தில் எம் எழுத்துக்களை வாசித்தாலும், எம் எழுத்துக்கள் கைகளில் நூல் வடிவில் தவளும் போது, அதை பார்ப்பதே தனிச் சந்தோஷம்.

வலைப்பதிவு எழுத்தாளர்கள் பலர், பல ஊடகங்களில் எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள். அது மட்டுமல்லாது பல பதிவர்களது பதிவுகள் ஊடகங்களில் எடுக்கப்படுகின்றன. (களவாகவும்). ஆனால் வலைப்பதிவர்களின் பதிவுகளை திரட்டி ஒரு புத்தகமாகவோ அல்லது சஞ்சிகையாகவும் வெளிக் கொணர பலரும் முயற்சித்தாலும் (முயற்சித்து கொண்டிருந்தாலும்) அது பாரியளவில் கைகூடவில்லை.

நாங்கள் சிலர், நண்பர்களாக இணைந்து பதிவர்களின் வித்தியாசமான பதிவுகளைத் திரட்டி ஒரு சஞ்சிகை வடிவில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை வெளியிட முயற்சிகளை எடுத்து வருகின்றோம். பக்க வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நாங்களே கையாளப்போகின்றோம். எனவே குறை நிறைகள் இருக்கும். ஆனாலும் உங்கள் கைகளில் கிடைக்கும் போது அது பூரணமான சஞ்சிகையாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கூடியவரை மேற்கொள்வோம்.

இது எந்த அமைப்பையோ, நிறுவனத்தையோ சார்ந்ததாக அல்லாமல் பதிவர்களின் கூட்டு முயற்சியாக இருக்கும். தகுந்த பக்க பலங்கள் இணையும் போது சஞ்சிகையை இலவசமாக கொடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.

எனவே அடுத்துவரும் 3 மாத காலப்பகுதிக்குள் ஒரு வலையுலக எழுத்தாளர்களின் சஞ்சிகை ஒன்றை எதிர்பாருங்கள். எல்லா பதிவர்களுடைய பதிவர்களையும் நாங்கள் மட்டும் கண்காணிப்பது என்பது இயலாத காரியம். எனவே நாங்கள் விசேடமாக குறிப்பிடும் காலப்பகுதியில் நீங்கள் வாசித்த, ஆக்க பூர்வமான பதிவுகளை நாங்கள் குறிப்பிடும் தொடர்பு முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்.

ஒற்றுமையுடன் கைகோர்ப்போம்.

நன்றி

பி.கு : இது இலங்கைப் பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டுமே!


வன்னியில் இடம் பெற்று வரும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய இந்தியாவின் விஷேட நிபுணர் குழு ஒன்று இலங்கை வரவுள்ளது. எதிர் வரும் இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள 47ஆயிரம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலே மீள்குடியேற்றப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இம் மீள்குடியேற்ற பணிகளுக்கு இந்திய அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், யுனிசெப் உட்பட பல்வேறு சர்வதேச பொது அமைப்புக்களும் நிறுவனங்களும் பல வழிகளில் உதவிகளை வழங்கி உள்ளன.

மீள் குடியேற்றப்படும் அனைத்து மக்களுக்கும் தலா 75 ஆயிரம் ரூபாவும் ஆறு மாதத்திற்கு தேவையான பொருட்களும் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படுகிறது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் பிரதேச செயலக அதிகரிகளிடம் தெரிவிக்கலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பகுதிகளில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் 75ஆயிரம் ரூபாய் என்பது அவர்களிடம் ஒழுங்காக சென்றடையவில்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தொகை வழங்கப்படுகிறது. பூரணமாக 75ஆயிரம் ரூபாயும் சென்றடைய வேண்டுமெனின் அதற்கு பொறுப்பான அமிகாரிகள் தான் கவனம் எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாண மக்களுக்கு சென்று சேரும் உதவிகளைப் போல் வவுனியா மற்றும் கிழக்கு பகுதி மக்களை சென்றடைய வில்லை என்ற கருத்தும் இருக்கின்றது. இதற்கான காரணம் பல்வேறு பட்ட தரப்பினரதும் நோக்கு யாழ்ப்பாணமாக இருக்கலாம். 75ஆயிரம் பணம் தான் சென்றடையவில்லை எனின் 6 மாதத்திற்கு தேவையான நிவாரணங்கள் கூட அவர்களிற்கு சென்றடையவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். கிளிநொச்சி நகர்புற மக்களுக்குத்தான் சிறியளவிலான நிவாரணங்கள் சென்று அடைந்துள்ளது. ஏனைய பகுதி மக்கள் நிவாரணத்திற்காக தவம் கிடப்பதாக அங்கிருந்து கிடைக்கும் உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்பட்ட போதும் இதுவரைக்கும் கடலில் மீன்பிடிப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்கிறார் மீன்பிடி தொழிலாளியான ஜொனிற்றன். அவர்களுடைய தொழிலுக்கு ஏற்ற உபகரணங்கள் எதுவுமே வழங்கப்பட இல்லை. அது மட்டும் அல்ல “எனக்கு கொஞ்சம் சிங்களம் தெரியும். அதனால பிரதேச செயலாளர் மூலம் போய் கதைத்து பொமிஷன் எடுக்கப்போறன்" எனவும் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் தான் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் உள்ளனர்.

காடுகளுக்கு சென்று விறகுகளை வெட்டவும் விவசாயம் செய்யவும் அனுமதி பெறுவதில் எவ்வித தடைகளும் கிடையாது. மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அரசாங்கம் 50ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு நிதி வழங்க முன்வந்துள்ளது. அதை விட மேலும் 1லட்சத்து 70ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன என பிரதியமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் மீள்குடியேற்றப்படுவார்களென தெரிவித்திருக்கும் நிலையில் அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவது எப்போது?