twitter


வன்னியில் இடம் பெற்று வரும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய இந்தியாவின் விஷேட நிபுணர் குழு ஒன்று இலங்கை வரவுள்ளது. எதிர் வரும் இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள 47ஆயிரம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலே மீள்குடியேற்றப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இம் மீள்குடியேற்ற பணிகளுக்கு இந்திய அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், யுனிசெப் உட்பட பல்வேறு சர்வதேச பொது அமைப்புக்களும் நிறுவனங்களும் பல வழிகளில் உதவிகளை வழங்கி உள்ளன.

மீள் குடியேற்றப்படும் அனைத்து மக்களுக்கும் தலா 75 ஆயிரம் ரூபாவும் ஆறு மாதத்திற்கு தேவையான பொருட்களும் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படுகிறது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் பிரதேச செயலக அதிகரிகளிடம் தெரிவிக்கலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பகுதிகளில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் 75ஆயிரம் ரூபாய் என்பது அவர்களிடம் ஒழுங்காக சென்றடையவில்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தொகை வழங்கப்படுகிறது. பூரணமாக 75ஆயிரம் ரூபாயும் சென்றடைய வேண்டுமெனின் அதற்கு பொறுப்பான அமிகாரிகள் தான் கவனம் எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாண மக்களுக்கு சென்று சேரும் உதவிகளைப் போல் வவுனியா மற்றும் கிழக்கு பகுதி மக்களை சென்றடைய வில்லை என்ற கருத்தும் இருக்கின்றது. இதற்கான காரணம் பல்வேறு பட்ட தரப்பினரதும் நோக்கு யாழ்ப்பாணமாக இருக்கலாம். 75ஆயிரம் பணம் தான் சென்றடையவில்லை எனின் 6 மாதத்திற்கு தேவையான நிவாரணங்கள் கூட அவர்களிற்கு சென்றடையவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். கிளிநொச்சி நகர்புற மக்களுக்குத்தான் சிறியளவிலான நிவாரணங்கள் சென்று அடைந்துள்ளது. ஏனைய பகுதி மக்கள் நிவாரணத்திற்காக தவம் கிடப்பதாக அங்கிருந்து கிடைக்கும் உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்பட்ட போதும் இதுவரைக்கும் கடலில் மீன்பிடிப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்கிறார் மீன்பிடி தொழிலாளியான ஜொனிற்றன். அவர்களுடைய தொழிலுக்கு ஏற்ற உபகரணங்கள் எதுவுமே வழங்கப்பட இல்லை. அது மட்டும் அல்ல “எனக்கு கொஞ்சம் சிங்களம் தெரியும். அதனால பிரதேச செயலாளர் மூலம் போய் கதைத்து பொமிஷன் எடுக்கப்போறன்" எனவும் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் தான் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் உள்ளனர்.

காடுகளுக்கு சென்று விறகுகளை வெட்டவும் விவசாயம் செய்யவும் அனுமதி பெறுவதில் எவ்வித தடைகளும் கிடையாது. மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அரசாங்கம் 50ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு நிதி வழங்க முன்வந்துள்ளது. அதை விட மேலும் 1லட்சத்து 70ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன என பிரதியமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் மீள்குடியேற்றப்படுவார்களென தெரிவித்திருக்கும் நிலையில் அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவது எப்போது?

0 comments:

Post a Comment