twitter


இன்று உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்தமான பார்வையும் ஜெனீவாவின் பக்கம் திரும்பியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 19ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இது இலங்கை அரசாங்கத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தொடரில் தாம் பங்கேற்கப்போவதில்லை என த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கூற்று ஒட்டுமொத்த த.தே.கூ உறுப்பினர்களது கூற்றல்ல என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தக்கூட்டத்தொடரில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவானது சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள இன்றைய நாளில் மாநாடு நடைபெறவுள்ள இடத்திற்கு முன்பாக இலங்கை தொடர்பான சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்று இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் - வவுனியா – மட்டக்களப்பு – கொழும்பு ஆகிய இடங்களில் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தமிழ்க்கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டங்களை வடக்கு – கிழக்கில் முன்னெடுத்தார்கள். கொழும்பு கோட்டை ரெயில் நிலையப்பகுதியில் தற்போது பெருமெடுப்பில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதால் போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள சட்டக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மேலும் பல உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் போக்குவரத்துக்கு பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தங்கள் உறவினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.




ஒரு வாரம் பதிவு எழுதாத பதிவர்களையே ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள். ஒரு வருடம் கழித்து வரும் என்னை யார் தான் நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறார்கள். அதே போல நானும் உங்களில் யாரையும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. காரணம் நான் பதிவெழுதாக காலப்பகுதியில் பதிவுலகப் பக்கமே வருவதில்லை. திரட்டிகள் கூட மறந்து போய்விட்டது. நிறுவன மாற்றம் - அதிகரித்த வேலைகள் என பதிவுலகப்பக்கமே தலை வைக்க முடியாதளவிற்கு வேலை வேலை வேலை.

பழையவர்களில் ஒரு சிலரைத் தவிர எல்லோருமே புதியவர்களாக இருக்கிறார்கள். நிறைய பதிவர்களின் வரவு பதிவுலகிற்கு ஆரோக்கியமாக இருந்தாலும் பழையவர்களைக் காண முடியவில்லையே என்பது வருத்தமாக உள்ளது. நானே “வேலை” என்பதை முன்னிலைப்படுத்தும் போது மற்றவர்களும் அதைத் தானே கூறுவார்கள். ஆனாலும் எல்லோரும் திரும்பி புதிய பதிவர்கள் - பழையவர்கள் என பதிவுலகைக் கலக்க வேண்டும் என்பது எனது ஆசை.

பதிவுப்பக்கம் மீண்டும் வந்தாகிவிட்டது. எதை(எவற்றை) எழுதுவது என்பது தான் ஒரே குழப்பமாக இருக்கின்றது. முன்பு ஊடகவியல் கல்லூரியில் படிக்கும் போது கொஞ்சம் எழுத்துக்களோடு அடிக்கடி பழக வேண்டியிருந்தது. கல்லூரி பாட விதானத்துக்காக சில விடயங்களைத் தேடி எழுதும் போது அதில் பாதியை ப்ளாக்கில் ஏற்ற முடிந்தது. தற்போது எழுத்துலகுடன் சம்பந்தப்படாத ஒரு உத்தியோகத்தில் இருப்பதால் பேஸ்புக்கிற்காக மட்டும் தான் கணனி விசைப்பலகையை தட்ட முடிகின்றது.

மீண்டும் விரைவில் பதிவுடன் சந்திக்கிறேன். (நம்புங்கப்பா!)