twitter


இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழு ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்களை பான் கீ மூன் நியமித்துள்ளார்.

இந்தோனேசியாவின் மர்சுகி டாருஸ்மன் தலைமையிலான இந்தக் குழுவில் தென் ஆபிரிக்காவின் யஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவின் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர்; இடம் பெற்றுள்ளனர். இந்த நிபுணர் குழு 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு அறிக்கையில் உள்ள மனித உரிமைகள் தொடர்பில் ஆராயவுள்ளது. இலங்கையில் இடம் பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின்போது சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயவுள்ளது.

வெட்ட வெளிச்சமாக தெரியும் சூரியனை கண்டு பிடிப்பதற்கு எதற்கு கொள்ளிக்கட்டை? மனித உரிமைகள் மீறப்பட்டவையா? அல்லது மீறப்படவில்லையா? என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எனினும் அதனை சட்ட மூலம் நிறுவ வேண்டும் அல்லவா? அதற்குத்தானாம் இந்த ஏற்பாடு.

இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட முனையும் இந்தக்குழு அதன் பணிகளை 4 மாதங்களுக்குள் நிறைவு செய்து கொள்ளும் தேவை ஏற்படின் இந்தக்குழுவின் காலம் நீடிக்கப்படும் எனறு நெசிர்சி குறிப்பிட்டுள்ளார். “தேவை ஏற்படின்” என அவர் குறிப்பிடும்போதே புரிந்து கொள்ள வேணும் இதற்கான தீர்வு இப்போதைக்கு கிடையாது என. எனினும் பரவாயில்லை உலக நாடுகளுக்கு இலங்கை செல்வதாக காட்டி கொள்ள வேண்டும் தானே!.

தமது அறிக்கையின் எந்த விடயங்களை பொது மக்களுக்கு வெளியிடுவது? எந்த விடயங்களை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு தெரிவிப்பது என்பது தொடர்பாக இந்தக் குழுவே தீர்மாகிக்கும் என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


பிறகென்ன உண்மைகள் வெளிவந்த மாதிரித் தான்! வந்து ஆராய்ந்து உடனே தீர்வு கண்டு விட்டுத்தான போவார்கள் போல இருக்கு. நல்ல தீர்வு வரும் எனஇ இக்குழுவை நம்பி இருக்கலாம். இந்தக் குழு இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட விரும்புகிறது. இந்நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் நோக்கம் அதற்கு இல்லை என நெசிர்கி குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டியது இலங்கையின் பொறுப்பு என்பதே பான் கீ மூனின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவத்துள்ளார். அப்படி எனின் முழுப் பொறுப்பையும் இலங்கை அதிகாரிகளிடம்; கொடுத்து விட்டு அவர்களுடைய நாட்டினிலேயே தங்கப்போகின்றனரா? அவ்வாறு எனின் 4 மாதங்கள் தேவை இல்லையே! பத்து நாட்களே போதுமானது. உடனே தீர்;வினை முன்வைத்து விடுவார்களே இலங்கை அரச தரப்புக்கள்.

இவ்வாறான எண்ணத்துடன் இவர்கள் இலங்கைக்கு வருவார்கள் எனின் இவர்கள் இலங்கை வருவதே பிரயோசனம் இல்லை என மக்களின்; கருத்து இருக்கின்றது. அவ்வாறு இவர்கள் இங்கு வந்தாலும் ஒழுங்கான முடிவு நமக்கு கிடைக்காது என்பதுதான். நாங்கள் எதிர்பார்க்கக்கூடிய தீர்வு. இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை சட்டங்கள மீறப்படவில்லை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள மீறப்படவில்லை என்பதுதான் முடிவாக இருக்கும். இல்லை எனின் இது பல வருடங்களுக்கு இழுத்து அடிக்கப்படும்.

கடந்த மே மாதம் இலங்கைக்கு வருகை தந்த போது முட்கம்பிக்குள் அடைபட்ட மகளை தனக்காக பாடல் பாடச் சொல்லி கேட்டவர்தானே பான் கீ மூன். இவ்வாறு உணர்வு கொண்ட பான் கீ; மூனை நம்பி எவ்வாறு பொறுப்பான பதவியை வழங்கலாமா என்ற கேள்வி எழுகிறது?

பொறுப்பாளிகள் பதில் சொல்வதில் தான் இருக்கிறது அதற்கான தீர்வு. அழுத்தங்கள் காரணமாக நாட்டுக்கு நாடு பயணம் செய்வது காரியமில்லை. உண்மையைக் கண்டறியப் போகிறோமா என்பதில் தான் இருக்கிறது உறுதியான தீர்வு.

கிளிப்பிள்ளை மாதிரி சொன்னபடி கேட்டால் வெளி உலகிற்கு பதில் சொல்வது கடினமானதே!


தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தில் கிடைக்கப் பெற்ற வெற்றியானது ஒவ்வொரு ஆண்டும் விழா எடுத்து கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. முதலாவது வருட வெற்றி நேற்று முன்தினம் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது. ஆனால் இந்த இறுதி யுத்தத்தில் தமிழர்கள் எவ்வளவு மனிதப் பேரவலத்திளை சந்தித்தனர்.

 • அகதிகளாக வகை தொகையின்றி இடம் பெயர்ந்தனர்.
 • வீடுகள் சொத்துக்கள் சுகங்களை இழந்தனர்.
 • ஏராளமானோர் சொந்தங்களை பறி கொடுத்தனர்.
 • முட்கம்பி முகாமில் அடைக்கப்பட்டனர்.
 • புலிப்போராளிகள் என் சந்தேகத்தில் தடுப்பு காவலில் போடப்பட்டனர்.
 • கடத்தல்கள், காணாமல்போதல், கைதுகள், தடுத்து வைப்புக்கள் என்பன இடம் பெற்றன.
 • நீதிக்கு புறம்பான கொலைகள், குடியேற்றங்கள்
 • அப்பாவி பெண்கள் கற்பழிப்பு
 • அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் வீதிச் சோதனை சாவடிகள் என்பவற்றை அதிகரித்தனர்.
 • கடலில் சென்று மீன்பிடிப்பதற்கு தடை விதித்தனர்.
 • துணை ஆயுதக்குழுக்களின் அட்டகாசங்கள் ஓங்கி நின்றன.
 • அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தன.

யுத்தம் முடிந்து ஓராண்டு ஆகியும் தமிழர்களின் வாழ்க்கை இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்ப இல்லை. இவ்வாறான ஓர் நிலையில் இந்த வெற்றி விழா அவசியம்தானா என தமிழ் மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. உண்மையாகவே ஒரு தாய் நாட்டு மக்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுவது உண்மை எனின், தமிழ் மக்களது தேவைகளை பூர்த்தி செய்யாது, எப்படி இவ்வாறான வெற்றி விழா கொண்டாட முற்பட்டனர்? எனவும் தமிழ் மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் மக்களது அடிப்படைத் தேவைகள், கவலைகள், துன்பங்கள் அதை விட எழுத்துக்களால் வர்ணிக்க முடியாத கஸ்ரங்கள்; மக்களிடம் குவிந்து இருக்கும்போது அதற்கான முழுமையான தீர்வுவுகள் இன்னமும் வழங்கப்படாத நிலையில் தமிழ் மக்களை இழிவு படுத்துவது போல இந்த வெற்றி கொண்டாட்டமானது அமைந்துள்ளது.

வெற்றி கொண்டாட்டத்தினை பிரமாண்டமாக கொண்டாடுங்ள்;. ஆனால் அதற்கு முன்னர் இராணுவத்தினால் என்னென்ன தமிழ் மக்களது உடமைகள் அழிக்கப்பட்டதோ அவை அனைத்தினையும் திருப்பி கொடுக்க முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.
எல்லாம் அரசினால் வழங்க முடியாது. ஏனெனில் எத்தனையோ தமிழ் மக்களின் உயிரினை இந்த அரசினால் வழங்க முடியாது. ஆகவே மக்களுக்கு வேண்டிய அடிப்படை தேவைகள் அனைத்தையும் அவர்கட்கு வழங்க வேண்டும் என்பது சர்வதேசத்தின் எதிர்பார்ப்பும் கூட.

மீளக்குடியேற்றினால் மட்டும் போதாது. அவர்கட்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும். மீளக் குடியேறாத அனைத்து மக்களையும் மீள்குடியேற்றம் செய்து அவர்கட்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இதன் பின்னர் வெற்றிக் கொண்டாட்டங்களை தாராளமாக கொண்டாடலாம். .

தமிழ் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திக்கச் சென்ற போது,

பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கூறினார், “வன்னி மக்களிடத்தில் நீங்கள் வழங்கிய மண்வெட்டிகள் சரியில்லை. அவை சீக்கிரத்தில் உடைகின்றன” என. அதற்கு ஜனாதிபதி, “பஷில் அந்த மண்வெட்டி யார் எமக்கு வழங்கியது?” என கேள்வி ஒன்றை வழங்கினார். அதற்கு பஷில் “அது இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது” என கூறியதும், “நீங்கள் முறையிட வேண்டியது என்னிடம் இல்லை, இந்தியாவிடம்தான் என்றாராம் ஜனாதிபதி.

ஜனாதிபதியின் பொறுப்பான பதில்(?) பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்!


போரினால் சின்னாபின்னமாக்கப்பட்ட பிரதேசத்தினை பார்வையிட்டு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுக்களுக்கும் இடையில் நேற்று மாலை 5 மணியளவில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

சந்திப்பினை நல்லபடியாக முடித்து வந்த பின்னர் பல்வேறுபட்ட முரண்பாடான கருத்துக்களை தமிழ் கூட்டமைப்பினர் ஊடகங்களிற்கு வழங்கி உள்ளனர்.


செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களிற்கு தெரிவிக்கையில் “தமிழ் மக்களின் பிரச்சினையினை பற்றி ஆராயப்பட்டது. அதிலே முகாம்களில் இருக்கின்ற மக்களை விரைவாக குடியேற்ற வேண்டும் என்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார தேவைகள், தொழில் வாய்ப்புக்கள், அடிப்படைத் தேவைகள் போன்றவற்றில் அக்கறை காட்ட வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ஆறு மாதத்திற்கு நீடிக்க வேண்டும், வீடு அமைப்பதற்கு 5 லட்சம் ரூபாவினால் நிதி அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் விவசாய தொழிலுக்கு தேவையான உபகரணங்களையும் விவசாயத்துக்கு தேவையான விதை வகைகளையும் மற்றும் தேவையான இதர வகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டோம்.


அது மட்டும் அல்லாது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களையும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளோம். எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு விடயங்கள் கேட்டும் செல்வம் அடைக்கலநாதனின் அறிக்கையின் படி ஜனாதிபதி ஒரே ஒரு கேள்விக்குத்தான் பதில் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர்களில் 2000க்கும் அதிகமானோரை விடுதலை செய்துள்ளதாகவும் சிலர் பிரச்சினைகளுக்கு உரியவர்களாக இருப்பதனால் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அரசியல் கைதிகள் தொடர்பான தகவல்களை திரட்டி தருமாறும் கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதியினால் கேட்டு கொள்ளப்பட்டது.

அரசியல் தீர்வு தொடர்பில் எந்த ஒரு கருத்தும் பரிமாறப்படவில்லை எனவும் ஜனாதிபதி இந்தியா சென்று திரும்பிய பின்னர்தான் மீண்டும் ஒரு சந்திப்பில் இது தொடர்பாக கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரினால் நிர்மூலமான அனைத்து வீடுகளையும் கட்டித்தர கூடிய வசதி அரசாங்கத்திடம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தமிழோசைக்கு தெரிவித்தார்.


விவசாயத்துக்கான உதவிகளை மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் எனவும் அரச தரப்பில் கூறப்பட்டது. அரசியல் விவகாரம் பேச முற்பட்ட வேளையில் விடுதலை புலிகள் கேட்டவற்றை நீங்கள் என்னிடம் கேட்க கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிங்கள மக்கள் வழங்கிய ஆணைப்படி தான் எதனையும் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளாராம்.

என்ன விதத்தில் இதை நியாயப்படுத்த முடியும்? தேர்தல் காலங்களில் இப்படியான வார்த்தைகளைக் கேட்கவேயில்லையே! பிறகு எப்படி இலங்கை அரசியல் அமைப்பில் இரண்டு மொழிகளும் சம அந்தஸ்துடையதாகவே கருதப்படுகிறது. அப்படியெனில் தமிழ் மக்களுக்கு தேர்தல் நடாத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவில்லையா? அவர்கள் ஆணையை வழங்கவில்லையா? இல்லாவிடின் அவர்களுக்குரிய வாக்குரிமையை இல்லாமல் செய்து விட்டார்களா?

செல்வம் அடைக்கலநாதன் இவ் விடயம் பற்றி எதுவுமே கதைக்கவில்லை எனவும் ஜனாதிபதி இந்தியா சென்று வந்ததன் பின்னரே இது தொடர்பக கூட்டமைப்புடன் கலந்தாலோசிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் சுரேஸ் பிரேமசந்திரன் இதற்கு முரண்பாடான கருத்தினை தெரிவித்துள்ளார்.

பேச்சு வார்த்தையின் இறுதியில் தமது கோரிக்கைகள் எல்லாம் தந்தை செல்வாவின் கொள்கைகளே என தாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும் ஒன்றுபட்ட இலங்கைக்கு ஒரு தீர்வையே தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இரண்டு கருத்துக்களிலும் சில விடயங்கள் தான் ஒத்து போகின்றன. மிகுதி...?

தமிழ் கூட்டமைப்பினரின் கருத்து வேறுபாடுகள் ஏன் இப்படியிருக்கின்றன.? தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் கூட்டமைப்பினர் காலா காலமாக தமிழ் மக்களுக்கு செய்த உதவியை அனைவரும் அறிவோம்.?? அது போலத்தான் அவர்கள் இனியும் தமிழ் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்னபதை தெளிவாக அறிய வைக்கிறது இந்த சந்திப்பு.

தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புகள் எப்பொழுதும் காற்றில் தூவிய விதைகள் மாதிரித் தான்.