twitter


போரினால் சின்னாபின்னமாக்கப்பட்ட பிரதேசத்தினை பார்வையிட்டு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுக்களுக்கும் இடையில் நேற்று மாலை 5 மணியளவில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

சந்திப்பினை நல்லபடியாக முடித்து வந்த பின்னர் பல்வேறுபட்ட முரண்பாடான கருத்துக்களை தமிழ் கூட்டமைப்பினர் ஊடகங்களிற்கு வழங்கி உள்ளனர்.


செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களிற்கு தெரிவிக்கையில் “தமிழ் மக்களின் பிரச்சினையினை பற்றி ஆராயப்பட்டது. அதிலே முகாம்களில் இருக்கின்ற மக்களை விரைவாக குடியேற்ற வேண்டும் என்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார தேவைகள், தொழில் வாய்ப்புக்கள், அடிப்படைத் தேவைகள் போன்றவற்றில் அக்கறை காட்ட வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ஆறு மாதத்திற்கு நீடிக்க வேண்டும், வீடு அமைப்பதற்கு 5 லட்சம் ரூபாவினால் நிதி அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் விவசாய தொழிலுக்கு தேவையான உபகரணங்களையும் விவசாயத்துக்கு தேவையான விதை வகைகளையும் மற்றும் தேவையான இதர வகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டோம்.


அது மட்டும் அல்லாது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களையும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளோம். எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு விடயங்கள் கேட்டும் செல்வம் அடைக்கலநாதனின் அறிக்கையின் படி ஜனாதிபதி ஒரே ஒரு கேள்விக்குத்தான் பதில் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர்களில் 2000க்கும் அதிகமானோரை விடுதலை செய்துள்ளதாகவும் சிலர் பிரச்சினைகளுக்கு உரியவர்களாக இருப்பதனால் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அரசியல் கைதிகள் தொடர்பான தகவல்களை திரட்டி தருமாறும் கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதியினால் கேட்டு கொள்ளப்பட்டது.

அரசியல் தீர்வு தொடர்பில் எந்த ஒரு கருத்தும் பரிமாறப்படவில்லை எனவும் ஜனாதிபதி இந்தியா சென்று திரும்பிய பின்னர்தான் மீண்டும் ஒரு சந்திப்பில் இது தொடர்பாக கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரினால் நிர்மூலமான அனைத்து வீடுகளையும் கட்டித்தர கூடிய வசதி அரசாங்கத்திடம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தமிழோசைக்கு தெரிவித்தார்.


விவசாயத்துக்கான உதவிகளை மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் எனவும் அரச தரப்பில் கூறப்பட்டது. அரசியல் விவகாரம் பேச முற்பட்ட வேளையில் விடுதலை புலிகள் கேட்டவற்றை நீங்கள் என்னிடம் கேட்க கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிங்கள மக்கள் வழங்கிய ஆணைப்படி தான் எதனையும் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளாராம்.

என்ன விதத்தில் இதை நியாயப்படுத்த முடியும்? தேர்தல் காலங்களில் இப்படியான வார்த்தைகளைக் கேட்கவேயில்லையே! பிறகு எப்படி இலங்கை அரசியல் அமைப்பில் இரண்டு மொழிகளும் சம அந்தஸ்துடையதாகவே கருதப்படுகிறது. அப்படியெனில் தமிழ் மக்களுக்கு தேர்தல் நடாத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவில்லையா? அவர்கள் ஆணையை வழங்கவில்லையா? இல்லாவிடின் அவர்களுக்குரிய வாக்குரிமையை இல்லாமல் செய்து விட்டார்களா?

செல்வம் அடைக்கலநாதன் இவ் விடயம் பற்றி எதுவுமே கதைக்கவில்லை எனவும் ஜனாதிபதி இந்தியா சென்று வந்ததன் பின்னரே இது தொடர்பக கூட்டமைப்புடன் கலந்தாலோசிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் சுரேஸ் பிரேமசந்திரன் இதற்கு முரண்பாடான கருத்தினை தெரிவித்துள்ளார்.

பேச்சு வார்த்தையின் இறுதியில் தமது கோரிக்கைகள் எல்லாம் தந்தை செல்வாவின் கொள்கைகளே என தாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும் ஒன்றுபட்ட இலங்கைக்கு ஒரு தீர்வையே தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இரண்டு கருத்துக்களிலும் சில விடயங்கள் தான் ஒத்து போகின்றன. மிகுதி...?

தமிழ் கூட்டமைப்பினரின் கருத்து வேறுபாடுகள் ஏன் இப்படியிருக்கின்றன.? தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் கூட்டமைப்பினர் காலா காலமாக தமிழ் மக்களுக்கு செய்த உதவியை அனைவரும் அறிவோம்.?? அது போலத்தான் அவர்கள் இனியும் தமிழ் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்னபதை தெளிவாக அறிய வைக்கிறது இந்த சந்திப்பு.

தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புகள் எப்பொழுதும் காற்றில் தூவிய விதைகள் மாதிரித் தான்.

3 comments:

  1. நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டோம்.

    நடவடிக்கை எடுக்க வேணும் என கேட்டால் எப்பவாம் எல்லோருக்கும் தீர்வு கிடைக்குமாம் ?

  1. தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புகள் எப்பொழுதும் காற்றில் தூவிய விதைகள் மாதிரித் தான்.

    ////ஹ ஹ ஹா ஹா ஹா அது இப்பவோ தெரிஞ்சுது ////

  1. ''மிழ் கூட்டமைப்பினரின் கருத்து வேறுபாடுகள் ஏன் இப்படியிருக்கின்றன.? தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் கூட்டமைப்பினர் காலா காலமாக தமிழ் மக்களுக்கு செய்த உதவியை அனைவரும் அறிவோம்.?? அது போலத்தான் அவர்கள் இனியும் தமிழ் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்னபதை தெளிவாக அறிய வைக்கிறது இந்த சந்திப்பு.

    தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புகள் எப்பொழுதும் காற்றில் தூவிய விதைகள் மாதிரித் தான்.''
    நல்ல கருத்துக்கள் .வாழ்த்துக்கள் நண்பி ..இப்படி தொடர்ந்தும் தமிழ் மக்களுக்காக போராடுங்கள் உங்கள் வலைப்பதிவு மூலமாக

Post a Comment