இந்தப் பதிவும் கடந்த வருடம் கல்லூரி ‘களச் செய்திச் சேகரிப்பின்’ போது எழுதப்பட்டது.
இப்போது எங்கு பார்த்தாலும் பாஸ்ட் பூட்ஸ்! நாவுக்கு சுவையான உடனடி உணவு! அதே போல பாஷன் எடியுகேஷன் கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? “எல்லோரும் சாதரண தரம் படிக்கின்றார்கள். உயர்தரம் படிக்கின்றார்கள். எனக்கு எல்லாம் அவ்வாறு அதிக காலத்தினை வீணாக்க முடியாது. குறைந்த காலங்களில் கல்வி கற்று வேலை பெறுவதே எனது நோக்கு” என்றான் 15 வயதை உடைய றமணன். அதே வயதுடைய மாணவர்களை சந்தித்த போது எட்வேட் எனும் மாணவனும் றமணனது வார்த்தையை வழிமொழிவது போல் கூறினான்.
பொருள் உற்பத்தியிலும் நீண்ட கால பாவனையை விட குறுகிய கால பாவனைக்கு ஏற்ற வகையில் தரமான பொருளாக இருப்பின் ஏற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது. அவ்வாறே கல்வி முறையிலும் மாற்றங்கள் உருவாகி விட்டன. ஒரு வயதுத் தரவளியான மாணவர்களை சந்தித்த போது இது சார்பாக கருத்துகள் தெரிவித்தனர்.
காலங்கள் மாறி உள்ள வேளை அதற்கேற்ப சமூகங்களும் மாறியுள்ளன. மனிதர்களது தேவைக்கு ஏற்ப குறுகிய கால தொழில் கல்வி பெறக்கூடிய கல்வி நிறுவனங்கள் பல தோற்றம் கண்டுள்ளன. எவை எவ்வாறு செயல்படுகிறது. என நோக்கிய போது சில உண்மைகள் தெரிய வந்தன. இவை குடிசை கைத்தொழிலிற்கு நிகராக இயங்குவதை காணலாம். அன்றைய குடிசை கைத்தொழிலும் சிறு சிறு வீடுகளில் சிறிய சிறிய இடங்களில் கைத்தொழில் இடம் பெற்றது. அதேபோல இன்று சிறு சிறு இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல தொழிற் பயிற்சி கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறான இடங்களில் கணனி, ஆங்கிலம், சட்டம், தாதி, முகாமைத்துவம், கணக்கியல், பொருளியல், வைத்தியம் மற்றும் மொழிக்கல்வி என பல கல்விகள் கற்றுக் கொடுக்கின்றனர். கணனி கல்வியிலும் ஆங்கில கல்வியிலும் எண்ணில் அடங்காத கல்வி நிலையங்கள் அதிகமாகவே உள்ளன. “தொழிற் கல்வி நிலையங்கள் எவ்வாறு அதிகரித்துள்ளது எனின் இளம் தலை முறையினர்களுக்கு கல்வி அறிவினை வழங்கி வாழ்விலே முன்னேற்றுவதற்கான ஒரு களமே இந் நிறுவனங்கள்” என்கிறார் கணனி ஆசிரியர் பிரதாப். இன்னும் ஒரு நிறுவனம் அதிகாரியான டேவிட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது வயது 44) “முதலில் வருமானம் பின்னர் தான் மாணவரது செயல்பாடு அனைத்திற்கும் முன்னுரிமை”. “லாப நோக்கோடு கூடிய மாணவனது கல்வி நிலைக்கு முன்னுரிமை அளிக்கின்றோம். மாணவர்கட்கு நாம் கேட்கும் பணத்தொகை பெரிது அல்ல. அவர்கள் வெளிநாடு சென்று சில கால வேளைகளிலே எமக்குத் தரும் பணத்தினை சம்பாதித்து விடுவார்கள்” என்கிறார் இன்னொரு நிறுவன இயக்குனர் கிருஸ்ணவேணி.
“ஏதோ சில காரணங்களுக்காக சில மாணவர்களது பாடசாலைப் பருவத்திலே கல்வி குழம்பி விடுகின்றது. அதற்காக அவருடைய வாழ்க்கை பாதிப்படைந்து விட்டது என விட்டு விடுவதா? அவர்களை நல்லதொரு கல்வியாளனாக ஆக்க வேண்டும். நான் கூடத் தான் உயர்தரம் மட்டும் படித்தேன் ஆனால் இப்போழுது எனது நிலை எங்கே இருக்கின்றது. நான் இப்போ ‘கோட், சூட்’ போடுகிறேன் எனின் எனக்கு அந்நாளில் நல்லதொரு நிறுவனம் கல்வி கற்க அனுமதித்ததால் தான் இப்போது கௌரவமாக உள்ளேன்”. என்கிறார் 40 வயதையுடைய காசிஸ் ஆங்கில ஆசிரியர்.
“மாணவர்களுடைய கல்வித் தகைமை முக்கியமில்லை. அவர்களுக்கு வேண்டிய சகல சான்றிதழ்களும் நாமே செய்து கொடுக்கின்றோம். எங்களுக்கு மாணவர்கள் பணம் மட்டும் தந்தால் போதுமானது” என்கிறார் வெளிநாட்டிற்கு பயிற்சிக்காக அனுப்பும் 78 வயதையுடைய கல்வி ஆசிரியர். “சான்றிதழ் என்பது காலனித்துவ நாடுகளில் தான் முக்கியம் பெறுகிறது. சான்றிதழ் ஒரு வைரஸ் நோய்” என்கிறார் கணனி ஆசிரியர். பாடசாலை அதிபர் ஒருவர் இதனை முற்றாக மறுக்கிறார். “ஓர் உத்தியோக ப+ர்வமாக மாணவனது திறமைக்கு வழங்குவது தான் சான்றிதழ். திறமையல்லாத மாணவர்கட்கு சான்றிதழ் வழங்கினால் திறமையுள்ள மாணவனிற்கு திறமையில்லாத மாணவன் நிகராகி விடுவானா?” என்கிறார் 56 வயதையுடைய வெள்ளவத்தை பாடசாலை அதிபர்.
கண்டிப்பாக எல்லோரும் படிக்க வேண்டும் அதுவும் பல்கலைக்கழகம் வரை சென்று படிக்க வேண்டும் அப்படிப் படித்தால் தான் கௌரவம் எனின் நமது நாட்டிலே அனைத்து மாணவர்களும் கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாது. ஏனெனில் அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழகம் ஏற்க மாட்டாது. ஏனைய மாணவர்கள் ஏதாவதொரு துறையில் முன்னேற வேண்டும் அதற்கு எந்;தத் துறை தனக்கு ஏற்ற வகையில் அமைகின்றது என தேடுகின்றான். அதற்கேற்ற வகையில் கல்வி கற்கவும் முனைகின்றார்கள் இன்றைய மாணவர்கள். “ஜப்பானில் கல்விகளை பாடமாகவும், தொழிற் பயிற்சியாகவும் கற்றுக்கொடுக்கின்றனர். அதே முறையினைத்தான் நாமும் இங்கு கடைப்பிடிக்கின்றோம். அதில் வெற்றியும் பெறுகின்றோம். மாணவர்கட்கும் அவ்வாறு கற்பதில் தான் ஆர்வம் உள்ளது”. என்கிறார் 65 வயதையுடைய கல்லூரி பணிப்பாளர்.
“வீதியில் ஏனோ தானோ எனத் திரிபவர்களும், விணான சண்டை சச்சரவிற்குள் உள்ளாகுபவர்களும் இவ்வாறு திரிந்து மதுபானைக்கும், போதை வஸ்துகளுக்கும் அடிமையாகாமல் வேறு தீய பழக்கத்திற்கும் உள்ளாகாமல் இருப்பதற்கும் இவ்வாறான கல்விகள் பயன்படுகின்றன. தொழிற்கல்வியிலே காலம் செல்வதனால் இவ்வாறான தீய வழிக்கு செல்லாது தடுக்கக் கூடியதாக உள்ளது” என சமூகத்தின்; ஆர்வலரான கணபதி கூறுகின்றார்.
“வகுப்பில் அந்த பையனைக் கண்டாலே எனக்கு கோபம் தான் வரும். கல்வி கற்று கொடுத்தாலும் கூட அவன் மண்டையில் எதுவும் ஏற்றிக் கொள்ள மாட்டான். நான் அவனுக்கு எத்தனை அடி அடித்துள்ளேன். முன்னேறவே இல்லை. இப்போ நான் ஒய்வு பெற்று விட்டேன். எனது கல்வி நிலையத்திலேயே பெரியதொரு பதவியை பெற்றுள்ளான் அம் மாணவன். அவனுக்கு தொழில் நுட்பத்திலேயே அக்கறை இருந்துள்ளது. தொழில் கல்வி நிறுவனம் சந்தர்ப்பம் வழங்கியதால் அம் மாணவனிற்கு நல்லதொரு வாழ்வு கிடைத்தது” என்கிறார் 65 வயதை உடைய ஞானசாரியார் பாடசாலை ஆசிரியர் நாராயணசாமி.
பாடசாலை கல்வி கற்று பல்கலை கழகம் செல்ல வேண்டும். அவ்வாறு கல்வி கற்றால் தான் ஒரு படிப்பு என அன்றைய காலத்தில் எண்ணினார்கள் ஏன் இன்று கூட அவ்வாறு தான் கிராமங்களில் எண்ணுகின்றனர். கல்வி என்பது ஒரு நேர்கோடு இல்லை. அது பல கிளை விட்டு செல்லும் ஆலமரமாகும் ஆகவே கல்வியினை பலவிதமாகவும் கல்வித் தன்மைக்கு ஏற்ற வகையியலும் கல்வி பயிலலாம் என தொழிற் கலவி நிலையங்கள் காட்டி நிற்கின்றன. எல்லோரும் அரசாங்க உத்தியோகம்தான் பார்க்க வேண்டும் என்பது இல்லை. பல்வேறு பட்ட தொழில் கல்வி நிறுவனங்கள் தோன்றி உள்ளன அதன் மூலம் பல்வேறு தொழில் வாய்ப்பினை பெற்று தன்னையும் வளர்த்து சூழ உள்ளவர்களையும் வளர்க்க முடியும.;
தொழிற்கல்வி நிலையங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பெரிய ஒரு நிறுவனத்தின் அதிகாரியான தயாநிதிமாறன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகின்றார். “நவீன முறையுடனாக அமைந்திருக்க வேண்டும். அதாவது கணனி வசதிகள் நிறைந்த பாட வசதிக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்க வேண்டும். அது மட்டும் அல்லாது புதுப் புது தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்திருக்க வேண்டும். முக்கியமாக இட வசதி போதுமானதாக அமைந்திருத்தல்”. “அத்தியாவசிய தேவை என்ன எனின் சாதாரண உயர்தரம் படித்து விட்டு பெறுபேறிற்காக சிறிது காலம் காத்திருக்கும் சமயத்தில் அவர்கட்கு ஆலோசனை வழங்கும் ஆலோசகர்கள் நிறுவனங்களிலே இருக்க வேண்டும். அவ்வாறெனின் மாணவர்கள் எக்கல்வியினை எவ்வாறு படித்தால் மாணவருக்கு உதவியாக இருக்குமென ஆலோசகர்களை நிறுவனத்தில் வைத்திருத்தல் வேண்டும்” என்கிறார் பாடசலை விஞ்ஞான ஆசிரியர் தயானந்தன்.
“எமது நிறுவனத்திற்கு தொழிற்கல்வி பெறுவதற்கு வந்துவிட்டான் அவனிற்கு ஏதோ கற்றுக்கொடுப்போம் என்று சிந்திக்காது பணத்தினைப் பெற்று விட்டோம் அதற்கேற்றவாறு அவனுக்குத் தேவையான தொழிற் பயிற்சிக் கல்வியினை வழங்குவோம் என சிந்தித்து அம்மாணவர்கட்கு மகிழ்சிசியுடன் கற்பித்தலை அழிக்க வேண்டும் மாணவனையும் மகிழ்ச்சியுடன் கல்வியில் ஈடுபட வைக்க வேண்டும்” என்கிறார் 32 வயதையுடைய சுரேஸ்;.
“இதே நிலையில் கல்வியை கை விட்டவர்கள் வாழ்க்கையில் உச்சம் பெறுவதற்கும் அவர்களது குறுகிய காலத்திற்கு தொழிற்பயிற்சிக் கல்வி வழங்குவது நன்மையானதும் கட்டாயமானதும். ஆரம்பத்தில் சாதனை படைப்பதாக எண்ணும் தொழிற் கல்வி நிலையங்கள் தோன்றுகின்றன ஆனால் காலப்போக்கில் ஏனோ தானோ என செயல்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது” என சமூகத்தில் அக்கறை கொண்ட பெண்ணொருவர் ( பெயர் குறிப்பிட விரும்பாத). மாறி வரும் கல்விக்கும், வேலைக்கும் கல்வி விரிவாக்கம் மாறுவது முக்கியமானது. வாழ்க்கைக்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டு வருதல் மாற்றங்களுக்கு ஏற்ப வாழும் தன்னம்பிக்கை இருத்தல் வேண்டும் இன்றைய வாழ்க்கை கூட மனிதனது ஒவ்வொரு நகர்வும் தனி மனித விருத்திக்கும சமூக விருத்திக்கும் கால் கோலாக அமைய வேண்டும்.
July 31, 2010 at 10:07 PM
நான் கொழும்பு வந்ததே தொழில் கல்வி கற்று வெளிநாடு போக.. ஆனா நடந்தது?