twitter


ஏனைய பதிவர்களுக்கு எப்படி கடந்த இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு போனது என தெரியவில்லை. ஆனால் நான் உட்பட அதிகமான பதிவர்கள் என்ஜோய் பண்ணி இருப்பார்கள் என்று மட்டும் எனக்கு நம்பிக்கை.

தெரியாத முகங்கள் அனைவரையும் சந்திப்பில் நேரில் பார்க்கக்கூடியவாறு இருந்தது. பதிவர்கள் சிலரை பெயர் மூலமே அறிந்து வைத்திருத்தேன். ஆனால் இங்கு அனைத்து பதிவர்களும் கண்களிலே சிக்கி விட்டனர். அனைத்து நண்பர்களுக்கும் 'ஹலோ' சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

என்னடாப்பா நேரிலே கண்டு காணாதது போல நின்ற இந்தப் பிள்ளை ப்ளாக்கரில வந்து ஹலோ சொல்லுகின்றாளே என பார்க்கின்றீர்களா? எல்லாமே வெட்க சுபாவம் தானுங்க. (அப்படீன்னா?)

முதலாவது காரணம் எல்லோரும் பழக்கப்பட்டவங்கள் இல்ல. அடுத்தது பெண்களின் வருகை குறைவாக காணப்பட்டது. மூன்றாவது கிளாசுக்கு போக வேணும் என்ற அவசரம். பதிவர்களில் அதிகமானவர்கள் ஆண்கள். அவர்களுடன் நானாகச் சென்று கதைப்பதற்குத் தயக்கமாக இருந்தது. பெண்களை விட ஆண்கள் தான் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் போலும். ஏனெனில் யாருமே வநது எங்களுடன் கதைக்கவில்லை. இவற்றையெல்லாம் விட காரணங்களும் இல்லாமல் இல்லை...

முதலிலே நாங்கள் எப்படி சென்று கதைப்பது என்றதொரு பிரச்சினை. அப்படி இருந்தும் மருதமூரான் அண்ணா, கூல்போய் கிருத்திகன், தாருஹாஷினி, ஜனா அண்ணா போன்றவர்கள் ஒரு நிமிடமோ இரு நிமிடமோ வந்து உரையாடி விட்டு சென்றார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. வதிசசும், நிரூயாவும் ஒரு தடவையேனும் போட்டோ எடுத்து விட்டு செல்லுங்கள் என்றதொரு வார்த்தையாவது சொல்லி வைத்தார்கள். அவர்களுக்கும் நன்றி.

பதிவர் சந்திப்பும் சரியாகத்தான் சென்றது பெரிய பிரச்சினை என்று ஒன்றும் வந்ததாகத் தெரியவில்லை. கருத்து முரன்பாடுகள் இருந்தது உண்மைதான். அக் கருத்து முரண்பாடு எங்கேயும் ஒன்று இருக்கத்தான் செய்யும். ஏனெனில் எல்லோருடைய மன நிலையும் ஒரே மாதிரியானது இல்லையே!

ஆழகான விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார் மு.மயூரன். அவருடைய பெரும்பாலான கருத்துக்கள் எனக்கு சரியாகவே தோன்றியது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. லோஸன் அண்ணா கடந்த சந்திப்புக்களில் கதைத்த அளவிற்கு கதைக்கவில்லை. அமைதியாக அவதானித்துக் கொண்டிருந்தார். அருண் அண்ணாவும் தன் பங்கிற்கு விளக்கம் தந்தார்.

ஆனால் ஒன்று பதிவர்களே! புல்லட் அண்ணாவிற்கு ஒரு பெரிய கவலை பதிவர்கள் எல்லாரும் சேர்ந்து ஓய்வூதியம் கொடுக்கவில்லை என. புறவாயில்லை அடுத்த தடைவை இதை பற்றி யோசிக்கலாம் என்று இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால் கவலை வேண்டாம் புல்லட் அண்ணா.

நிரூஜாவும் நன்றாகவே தொகுத்து நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். குழுமத்தினை எவ்வாறு கையாளுவது என கௌபோய் மது கூறியிருந்தார். என்னுடைய நண்பி ஒருவர் இன்னமும் குழுமத்தில் இணையாமல் உள்ளார். அவவும் குழுமத்தில் இணைவதற்கு மது ரொம்பவே உதவி புரிந்துள்ளதாக கூறினார். கடனை வாங்குவது போல் பயந்து பயந்து காசைச் சேகரித்தார் பவன். நிறையவே புதியவர்கள் வந்திருக்கிறார்கள்.

கோபி வாங்கி வந்த வடை தூள் தூளாகி விட்டது என நினைக்கிறன் . மன்னிக்கனும் அது பகோடா என பின்னர் தான் தெரிந்து கொண்டேன். (ஹீ ஹீ) அது நன்றாக இருந்தது. ஆனால் அனுதினன் வீட்டில் செய்த றோல் பெஸ்ட். அவங்க அம்மாவுக்கும் நன்றிகள். கேசரி நிரூஜா வீட்டிலிருந்தாம் வந்தது. ட்ரிங்ஸ் வரோ கரைச்சது போல.. அது தான் ஒழுங்கா இல்ல. இடைவேளை சிற்றுண்டி அனைத்தும் நன்றாக இருந்தது.

பதிவர்கள் பதிவுலகைத்தாண்டி என்ன செய்யலாம் என ஆராயப்பட்டிருந்தது. நிச்சயமாக எதையாவது செய்ய வேண்டும். அதுவும் ஒற்றுமையாக.. நானும் ஒத்துழைப்பு வழங்கத் தயார்.
டிஸ்கி : என்னங்க தலைப்பினை பார்த்தவுடன் பயந்திட்டீங்களா? அப்படிச் சொன்னால்தானே இந்தப்பக்கம் வர்ரீங்க. வாங்க வந்துட்டீங்களா.? உங்க கருத்தையும், வாக்கையும் மறக்காமல் பதிவு செய்யுங்களன்.


சரியாக நான்கு மாதங்களின் பின் ஒரு பதிவுடன் சந்திக்கின்றேன். அதுவும் 3ஆவது இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு நெருங்கும் வேளையில். (நானும் இலங்கைப் பதிவர் எண்டு காட்டோணும் எல்லோ!). அதிகரித்த வேலைப்பழுக்களால் பதிவுலகத்தை மறந்து விட்டேன்.

தமிழ்ச் சங்கத்தில் நடந்த முதலாவது சந்திப்பில் கலந்து கொண்டேன். 2ஆவது சந்திப்பில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை. மூன்றாவது சந்திப்பில் கலந்து கொள்வேனா என்பது 50 - 50 வாய்ப்பிலேயே இருக்கின்றது. அதனால் வருகையை உறுதி செய்யவில்லை. சந்திப்பு மாலையில் இடம்பெற்றால் எனக்கு வசதியாக இருந்திருக்கும். (ஒவ்வொரு பதிவர்களின் நேரத்தையும் தனித்தனியே கேட்க முடியாது தானே!) அதனால் சந்திப்பு சிறப்பாக இடம்பெற மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன். ஏற்பாட்டாளர்களினால் வழங்கப்பட்டிருக்கும் நிகழ்வு பற்றிய அறிவிப்பு கீழே...


நிகழ்வு: பதிவர் சந்திப்பு 2010
திகதி: 19-12-2010
நேரம்: காலை 09:31
இடம்: கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06

நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • பதிவர்கள் அறிமுகம்
  • கலந்துரையாடல் 1 – கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல் மற்றும் ஏனைய தொழிநுட்பப் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 2 – தமிழ் தட்டச்சு கருவிகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும்.
  • இடைவேளையில் இன்னிசை.
  • கலந்துரையாடல் 3 – பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 4 – பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.
  • பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.
  • நன்றியுரை.

எனவே பதிவர்கள், பதிவு எழுத விரும்புபவர்கள், பதிவுலக வாசகர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் வரவேற்கின்றோம்.

இந்த பதிவர் சந்திப்பை பற்றிய மேலதிக தகவல்களை நிரூஜா, வதீஸ், அனுதினன்,வரோ, அஷ்வின், பவன். ஆகிய ஏற்பாட்டு குழு அங்கதவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். வெளியூரிலிருந்து வந்து கலந்து கொள்ள விரும்புவோரில் தங்குவதற்கு இடவசதி தேவைப்பட்டால் 13ம் திகதிக்கு முன்னதாக அஷ்வின்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கைத் தமிழ் பதிவர் சந்திப்பு 2010 இற்கு Earthlanka நிறுவனத்தினர் அனுசரணை வழங்குகின்றனர் என்பதை நாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.



ட்ரிப் போயிருக்கீன்களா? எடுத்தவுடனே ட்ரிப் போனிங்களா என கேட்கிறேன் என பார்க்கிறீன்களா? இதில தானே விடயமே இருக்கு. என்ன வில்லங்கம் என கேட்கிறீர்களா? ஒரு வில்லங்கமும் இல்லை வாங்க சேர்ந்து வாசித்து உங்க ட்ரிப் அனுபவங்களையும் சொல்லுங்க. (யாழ்ப்பாணத்தில் வசித்தவர்களுக்கு அதிகளவாக ஒத்து வரும் என நினைக்கிறன்)

அதிகமாக அஞ்சாங் கிளாசில ஒரு ட்ரிப் ஒன்னு போயிருப்பீங்க என நினைக்கிறன். அதுவும் பாடசாலையால தான் கூட்டி கொண்டு போயிருப்பாங்கள். ஸ்கொலசிப் எக்ஸாம் எடுத்த மாணவர்களுக்காக ஒரு ட்ரிப். ஐஞ்சு நாள் பத்து நாள் இல்லைங்க. அது ஒரு நாள் ட்ரிப் தான்.

அந்த ட்ரிப்பை நினைத்து எத்னையோ நாள் தூங்காமல் அந்த நாள் எப்போ வரும் என எதிர்பார்த்து காத்து இருந்த காலமும்; உண்டு. அந்த நேரத்தில ஒரு நாள் ட்ரிப் எனின் ஏதோ லண்டன், கனடா போற மாதிரி.

ட்ரிப் அன்று காலையில அம்மா எழுவதற்கு முதல் எழும்பி அம்மாவையே நாங்கள் எழுப்பி விடுவோம். மற்றும்படி எவ்வளவு மல்லுக்கட்டி அம்மா எங்களை எழுப்பினாலும் ம்கூம்…. எழும்பவே மாட்டோம்.

அம்மா சாப்பாடு செய்து டிபன்பொக்ஸில சாப்பாட்டினை வைத்து யூஸ் கரைத்து மிக்ஸர், பகோடா என எவ்வளவு தின் பண்டம் தேவையோ அவ்வளவையும் வைத்து பத்தாக்குறைக்கு 2 பணிஸையும் பாக்குக்குள்ள அடைந்து வடிவா சாப்பிடு பிள்ளை என தந்து விடுவினம ஏதோ பத்து பதினஞ்சு நாள் பிரிந்து இருக்கிற மாதிரி)

அதுமட்டும் அல்ல 50ரூபா காசும் எங்கட கையில தருவாங்கள். பெரிய சந்தோஸம். நான் படிக்கிற காலத்தில 50ரூபா என்பது எனக்கு பெரிய காசு மாதிரித்தானுங்க. எல்லா பெத்தவர்களும் எங்களிடம் கூட வரும் வகுப்பாசிரியர்கிட்ட பிள்ளை ஏதாவது ஆசைப்பட்டால் வாங்கி குடுங்க என அவரிடம் சிறியளவிலான பணத்தினை கொடுத்து விடுவார்கள். சிறிது மனக்கஷ்டம் இருக்கும்தான் எங்களிடம் தராமல் வகுப்பாசிரியரிடம் கொடுப்பது. அந்த நேரத்தில அதுவா முக்கியம்? ட்ரிப் போனால்சரி……….

யாழ்ப்பானத்தில ட்ரிப் எனின் எங்கையங்க கூட்டிக்கொண்டு போவினம்? வல்லிபுரக்கோவில,; சந்நிதி கோயில் கீரிமலை இப்படியான பிரதேசங்களுக்குதானுங்க. இந்த இடங்களுக்கு போறதுக்கு தானுங்க ஒரு மாதமாக ஆர்ப்பாட்டம் செய்வது.

அவ்வளவு கஸ்ரப்பட்டு வெளிக்கிட்டு பஸ்சுக்குள்ள சத்தி எடுத்து களைத்து தூங்கி விடுவார்கள் சில பேர். பஸ்காரனுக்கு “சீ” என்று போய் விடும். அந்த சின்ன வயசில பஸ்சிலை எல்லாம் பயணம் செய்வது புதுசுதானே. பஸ் முன் பக்கம் சென்று கொண்டிருக்க மரங்கள் வாகனம் எல்லாம் பின்னோக்கி செல்வது போல இருக்கும். “இங்க பாரேன் எங்கட இடத்தில மரம் எல்லாம் நிக்கும். ஆனால் இங்க மரம் எல்லாம் ஓடுது. என மற்றவர்கட்கு விளக்கம் வேற வைப்போம். அந்த நேரத்தில அதுதானுங்க அறிவு.

பின்னர் 9ஆம் ஆண்டில ரியூசனால் ஒரு ட்ரிப் ஒன்னு போயிருப்பீன்களே. அதில சில பேர் போயிருக்கமாட்டார்கள். ஏனெனில் வீட்டில அனுமதி கிடைக்காது. எல்லாரும் சேர்ந்து போறது (ஆண்கள், பெண்கள்) போக வேணாம் என ஒரு பூகம்பம் தோணும். தேவை எனின் அந்த இடத்துக்கு நாங்கள் கூட்டிக்கொண்டு போறம் என்பார்கள். இவையளுடன் போனால் எங்கே என்ஜோய் பண்ணுவது? சொன்னால் புரியவா போகுது? தலையை ஆட்டி விட்டு பேசாமல் இருப்போம்.

சில பேருக்கு வீட்டில இலகுவாக அனுமதி கிடைத்து விடும். அவர்கள் ட்ரிப்புக்கு செல்ல ஆயத்தமாவார்கள். திரும்பவும் அதே இடங்கள்தான். என்ன இன்னும் ஒரு இடம் வித்தியாசமாக இருக்கும். அது கடற்கரை தான். போய் வந்தவர்கள் அதைப்பற்றி கூறும்போது போகாதவர்கட்கு ஒரு மாதிரித்தான் இருக்கும்.

யாழ்ப்பாணத்தில நிறைய இடங்களுக்கு செல்வதற்கு அந்த நேரத்தில தடை விதித்து (அனுமதி இல்லை) இருந்தார்கள். அதனால் பல இடங்களுக்கு செல்ல முடியாது இருந்தது. அந்த நேரத்தில அனுமதி கிடைத்து இருப்பின் சந்தர்ப்பங்கள் கிடைத்த வேளை பயன்படுத்தி இருக்கலாம். அந்த நேரத்தில் சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டு…………..
“இப்போ யாழ்ப்பாணத்துக்கு ட்ரிப் ஒன்னு அரேஞ் பண்ணுவோமா” என பலர் பலரிடம் கேட்க வேண்டிய தேவை இல்லாமல் இருந்து இருக்கும்.

அதன் பிறகு பாடசாலைக்கல்வி முடித்ததும் அடுத்த கல்விக்காகவோ அல்லது வேலை வாய்ப்புக்காகவோ வேறு இடங்களுக்கு சென்று இருப்பீர்கள். அந்த நேரம் நீங்கள் சின்ன பிள்ளைகளாக இருந்து இருப்பீங்க இப்போ……..
இப்போது செல்வது ட்றிப்புக்காக இருந்தாலும் ஒவ்வொரு பிரதேசங்களும் அவர்களது வாழ்க்கை முறைகளும் எப்படி இருக்கும் என வித்தியசமான வியூகத்தில பார்ப்பீர்கள் என நினைக்கிறன்.

நாங்களும் கல்விக்காகத்தான் ஒரு ட்ரிப் சென்றோம். அது ஒரு நாள் ட்ரிப் இல்லைங்க நாலு ஐந்து நாள் ட்ரிப்புங்க. சின்ன வயசில போன ட்ரிப் மாதிரி இல்லைங்க. வளர்ந்தவுடன் போவோம் பாருங்க அதிலதானுங்க இருந்தது ஒரு சந்தோஷம்.

யாழ்ப்பாணத்திலையே எத்தனையோ இடங்கள் இருக்கு அதை எல்லாம் பார்க்காமல் விட்டு விட்டு இப்போ பிற இடங்களுக்கு சுற்றுலா மேற்கொள்கின்றோம். நாம் பிறந்து வளர்ந்த இடங்களுக்கு பக்கத்தில உள்ள ஊர் கூட சிலருக்கு ஒழுங்காக தெரியாது.
ட்ரிப்பை பற்றி எழுத வந்ததற்கு காரணம் இருக்குங்க. ஒன்று நான் வேலை செய்யும் இடத்தில் ட்ரிப் ஒன்னு அரேஞ் பண்ணுகின்றார்கள். இரண்டாவது விடயம் இன்றைய செய்தி தானுங்க.. வடக்கு மாணவர்களுக்கு இலவசமாக சுற்றுலா மேற்கொள்ள உள்ளதாக வடமாகான ஆளுனர் மேஜர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்து இருந்தார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 500பேரை இவ்வாறு அழைத்து செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவர்கட்காக 16 இலட்சம் ரூபா நிதியை கீழ் 8 நாளைக்கு வெளி மாவட்டங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர்.

முதல் கட்டமாக 250 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் தமது முதலாவது சுற்றுலா பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளனர். தரம் 8 முதல் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களே இந்த இலவச சுற்றுலாவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ம்….. என்ன செய்வது? அதில நான் இல்லையே……

சுற்றுலாவின் போது மாணவர்கள் பாராளுமன்றம், நூதனசாலை, உயர் கல்லூரிகள், அனுராதபுரம், காலி, மாத்தறை, கதிர்காமம், கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளனர்.


எதற்காக அழைத்து செல்கின்றார்கள் இதற்கான பின்புலம் என்ன என்பது எல்லாம் வேறு. ஆனால ட்ரிப் போகிறார்கள்.

இப்படி எல்லோரும் ட்ரிப் என வெளிக்கிடும்போது பதிவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நாள் ட்ரிப்பினை அரேஞ் பண்ணி நல்ல இடத்தினை தெரிவு செய்து ஏன் ட்ரிப் ஒன்று போகக்கூhது…………? முடிந்தால் ட்ரைய் பண்ணி பாருங்க பதிவர்களே………


பதிவை வாசிக்க வரும் வாசகர்கள் எல்லாரும் உயர்தரப் பரீட்சை எழுதி இருப்பீங்க என நினைக்கிறன். அல்லது ஏதோ ஒரு பரீட்சை எழுதியிருப்பீங்க தானே! அந்த நேரத்தில எப்படி இருந்தீங்க என சும்மா ஒரு தடவை கற்பனை பண்ணி பார்ப்போமா? எக்ஸாம் எடுக்கும் நேரத்தில் அழுதீங்களா அல்லது சிரித்தீங்களா? ஹஹ ஹா ஹா.. பயத்தில் சும்மா சும்மா எல்லாம் உளறினீர்களா? நித்திரையில் கூட படித்ததை பாடமாக்கி இருப்பீங்களே! ஒரு தடவை பின்னோக்கி பயணிப்போமா……ம் வாருங்கள் நண்பர்களே........

உயர்தரத்திற்கு வந்து 2 வருடங்கள் இருக்கும் ஆனால் எக்ஸாமுக்கு முதல் நாள் நினைப்போம். இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தால் எப்படி இருக்கும் என (ஏதோ அந்த இரண்டு நாளில் படித்து 3யு எடுப்பது போல) அந்த இரண்டு நாட்கள் இருந்தால் தேவையான அனைத்தையும் படித்து முடித்து விடலாம் என்ற சிந்தனை. ஆனால் இரண்டு நாள் இருந்தால் என்ன? நாலு நாள் இருந்தால் என்ன? அந்த இடைவெளியில் எம்மால் படித்து விட முடியாது.

அதிஷ்ட வசமாகக்கூட அப்படி ஒரு நாள் நம்மளுக்கு கிடைத்தால் ஒரு தடவையும் கிடைக்காது. அப்படி கிடைத்தால் கூட இன்னமும் ஒரு நாள் இருந்தால் எப்படி இருக்கும் என சிந்திக்கும் நமது மனம் அதுதான் மனித மனம்……….

கடவுளில் நம்பிக்கை இல்லாத அத்தனை பேருக்கும் கடவுளில் நம்பிக்கை வந்து இருக்கும். அந்த நேரத்தில் எத்தனை பேர் கோயிலில் நேத்தி வைத்த அனுபவம் இருக்கும்? கோயிலுக்கே சென்று இருக்கமாட்டீர்கள் ஆனால் ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு சென்று இருப்பீர்களே.

சேர்ச்சில் எத்தனை பேர் முட்டி தேய தேய முழந்தாளில் நடந்து இருப்பீர்கள்? கண்ணை மூடி மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி முழந்தாளில் எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக நின்று இருப்பீர்கள். (இவை அனைத்தும் நான் கண்ணால் கண்டதுங்க ஏனைய சமயத்தை எழுதவில்லை என குறை நினைக்காதீங்க) இப்படி எல்லாம் கஸ்ரப்பட்டது உண்மை தானே.

எக்ஸாம் அன்று நாங்கள் தானே ஹீரோ எங்களை சுற்றி உள்ள நண்பர்கள் உறவுகள் வாழ்த்து சொல்ல எங்களை சுற்றி அனைத்து கூட்டமும் நின்று வழி அனுப்பி விடும். அதுக்குள்ள முழிவியளம் எல்லாம் பார்த்து பாடசாலைக்கு வந்தால்………….

அங்கே ஆசிரியர் நல்ல எழுதுங்க என்னுடைய மானத்தை காப்பாத்தி போடுங்க யோசிச்சு கவனமா எழுதுங்க (யோசிக்கிறதுக்கு எங்க நேரம் தர்றாங்க) என வாத்தியார் கஸ்ரப்பட்டு கத்த(அட்வைசாம்) மண்டையை மட்டும் ஆட்டி விட்டு புத்தாக்குறைக்கு தங்யூ என கூறி விட்டு வருவோம். வாத்தியாரை பாத்து உங்க மானத்தை நான் காப்பாற்றுகிறேன் என யாரும் கூறமாட்டார்கள். அது வாத்தியாருக்கும் பழக்கப்பட்டு போயிட்டுது. ஒவ்வொரு வருடமும் வாத்தியார் இதைத்தானே (அற்வைசையும் நன்றியையும்) செய்தும் கேட்டும் வருகிறார்.

எக்ஸாம் ஹோலுக்கு போனதும் கை பதற கால் நடுங்க மிச்சத்துக்கு வியர்த்து கொட்டும். கடவுளிடம் தான் நம்மளுடைய முறைப்பாட்டையும் வைத்து விட்டு வந்து இருக்கோமே பிறகு எதுக்கு பயப்பிட வேணும்? என நம்மை நாமே தேற்றி கொண்டு இருப்போம். அந்த நேரம் பார்த்து சுப்பவைஸர் எங்களையே நோட்டம் விடுவார். இந்தப் பிள்ளை வந்ததில் இருந்து முழுசிக்கொண்டே இருக்குது என டவுட் பட்டுவிடும். அதில் இருந்து ஸ்பெஷலாய் கவனிக்கும் அந்த ஆள். இந்த ரென்ஸன் எல்லாத்தையும் விட்டு விட்டு எக்ஸாம் எழுதுவம் என கையை நீட்டி வினாத்தாளையும் வேண்டி விடுவோம்.

பேப்பரை வேண்டியது தான் தாமதம் மேலோட்டமாக ஒரு தடைவ பார்த்து விட்டு எழுத ஆரம்பித்து விடுவோம். எழுதிக்கொண்டு இருக்கும்போது முன்னுக்கோ அல்லது பக்கத்திலையோ பார்வை போய் விட்டது எனின் அவ்வளவு தான். நாங்க எழுதிக் கொண்விருந்த விடை கூட மறந்து போய் விடும். முன்னுக்கு பின்னுக்கு பார்க்காவிட்டால் உயிரே போகிற மாதிரி இருக்கும்.

பெல்லை அடிக்க பேப்பரை குடுத்துவிட்டு சும்மா இருப்போமா? ஹேய் சுகமாடீ? பறவாயில்லை….. ஏதோ செய்தேன் என பக்கத்தில இருந்து பதில் வர. இப்படி ஒருவரா கேட்பது? எக்ஸாம் எழுதின அத்தனை பேரும் கதைக்க தொடங்க………. சூப்பவைசர்கள் சத்தம் போடக் கூடாது என கத்த….. அதையும் மீறி கதைத்து பேச்சு வாங்கிய பின் ஒரு மாதிரி அவர்களின் அனுமதியுடன் வெளியில வந்த விடுவோம்.

வெளியில வந்த உடன் கூட்டம் கூட்டமா உவ்வொரு நிழலில் கீழ் நின்று ஏதோ நாங்கள் தான் பேப்பர் திருத்துற ஆக்கள் மாதிரி எது சரி எது பிழை என பெரிய ஒரு ஆராச்சி செய்வோம். அதில திருப்தி படாமல் எழுதினது பிழை என தெரிந்தாலும் பாடசாலை கோயிலுக்கோ சேர்ச்சுக்கோ போய் சென்று நீளமான முறைப்பாடு ஒன்றை வைத்து விட்டு எப்படியாவது “ஏ” வர வேணும் என மண்டாடி விட்டு வருவோம்.

எத்தினை பேர் விடையை மாறி எழுதி விட்டோம் என கண்ணை கசக்கி கொண்டு வந்து இருப்பீங்க….? எத்தனை பேர் மற்றய நாள் எக்ஸாமுக்கு படிக்காமல் இதையே நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருந்தீர்கள்? வாத்தியார் தெரிவு செய்த (சொய்ஸ்) கேள்வி வரவில்லை என்றதும் எத்தனை பேர் வாத்தியாரை திட்டி தீர்த்து இருப்பீங்க?

இன்னுமொரு ஜோக் உங்களுக்கு எல்லாம் ஏற்பட்டதோ தெரியாது. எங்கட பாடசாலையில் நடந்ததுங்க. ஆங்கில பாடம் எக்ஸாம் அன்று யாருமே கோயிலுக்கும் போகவில்லை சேர்ச்சுக்கும் போகவில்லை. வினாத்தாள் தந்த ஒரு மணி நேரத்துக்குள் அதிகளவானோர்கள் செய்து முடித்து விட்டார்கள். நானும்தான் சூப்பவைஸர்களுக்கு ஒரே அதிசயம் “செய்து முடித்து விட்டீர்களா?” என்றார்கள் அதிகளவானோர்கள் “ஓம்” என பதில் வழங்கினார்கள். “விடைத்தாளை வாங்கப் போறீர்களா?” என ஒரு கேள்வி. “இல்லை இல்லை செய்ததை திருப்பி பாருங்க” என்றார்கள்.

என்ன கொடுமை அந்த பேப்பரில விடை எழுதினால் தானே திருப்பி பார்த்து சரியா பிழையா என திருத்துவதற்கு. இதை எல்லாம் தெரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் எல்லாம் சுப்பவைஸ் பண்ண வந்து விட்டார்கள். என மனதுக்குள் நினைத்து கொண்டோம்.

சும்மா எப்படீங்க மிகுதி நேரத்தை போக்குவது? கண்ணை காட்டி கையை காட்டி சிரித்து இப்படியே போய் கொண்டு இருக்க சுப்பவைஸர்கள் சூடாகி நல்ல ஏச்சு தந்தார்கள். அதை யாருங்க பொருட்படுத்தினது? ஏ.எல் மாணவர்கள் எலலோரும் ஒன்று கூடினால் கேட்கவா வேணும்? ஆங்கில பாடத்தில் மட்டும் தானுங்க பண்ணா (கரn) போச்சுது. ஒரு டென்ஸனும் இல்லாமல் தவணைப்பரீட்சை எடுதுவது போல எழுதினோம்.

தற்பொழுது உயர்தரப்பரீட்சை நடைபெறுகிறது. மாணவர்கள் எல்லாரும் நாங்க எக்ஸாம் எழுதின மாதிரித்தான் எழுதுவார்களோ? அல்லது சிம்பிளா எழுதி விட்டு 3பாஸ் இருந்தால் போதும். வேறை எதுவும் படிப்பம் என எண்ணுகிறார்களோ தெரியவில்லை.

பணம் இருக்கிறவன் எப்படியும் கல்வி கற்பான். பணம் இல்லாதவர்கள் எப்படியாவது பல்கலைக்கழகத்துக்கோ அல்லது கல்வியற் கல்லூரிக்கோ போக வேணும் என துடிப்பான் இதுதான் இன்றைய கல்வி..