twitter


இலங்கையில் ஒரு வருடத்துக்கு முன்னர் பொலிஸாரின் ஆதிக்கமே கையோங்கி காணப்பட்டது. இவர்கள் என்ன செய்தாலும் அவர்களை திருப்பி கேள்வி கேட்க முடியாது. அது மட்டும் அல்ல எங்கள் கேள்விகளையும் கேட்கவும் முடியாது. பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் கைது செய்வதும், மக்களை பரிசோதனை செய்வதும், அடையாள அட்டைகளை பார்ப்பதும், பின்னர் அதனை வேண்டி வைத்து விட்டு பொலிஸ் நிலையத்திற்கு வரும்படி கூறுவதும், முன்னுக்கு பின் முரணான கேள்விகள் கேட்பதும், சந்தேகம் எனும் பெயரில் கைது செய்வதும் அவர்களது கடமைகளாக காணப்பட்டது.

இப்போது அவர்கள் என்ன செய்கின்றனர் என என் கண்ணால் தெரிந்ததையும் காதால் கேட்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவை யாவும் உங்கள் கண்ணுக்கும் புலப்பட்டு இருக்கும் என நம்புகிறேன்.

பொலிஸாரினால் இலங்கையின் பல பாகங்களிலும் போதைவஸ்துக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளினை தடை செய்வதை மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருவதனை நாம் ஊடகங்கள் மூலம் அவதானிக்க கூடியதாக உள்ளது. அதில் அவர்கள் வெற்றி பெற்று வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. பொலிஸின் இந்த நடவடிக்கைகளினால் போதைப் பொருட்களிற்கு மக்கள் அடிமைப்படுவதனை ஓரளவேனும் தடுக்கக் கூடியதாக உள்ளது. எனினும் சில மக்களின் அன்றாட பாவனைகளில் போதைப்பொருட்களும் பாவனையில் எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.

அது மட்டும் அல்லாது அங்கீகாரம் பெறப்படாத கருச்சிதைவு மையங்கள் பல பொலிஸாரின் புலனாய்வுப் பிரிவால் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றிற்கு சீலும் வைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்ககப்படாத எத்தனையோ கருச்சிதைவு மையங்களை நிறுவுவதனை தடுத்து நிறுத்துகின்றனர். (உ-ம்)(அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு முற்றுகை) அங்கீகரிக்கப்படாத கருச்சிதைவு நிலையங்கள் நிறுவுவதனால் முறையான சிகிச்சை முறை இல்லாது செய்யும் சிகிச்சை முறையினால பல உயிர்கள் இறக்க நேரிடுகின்றன. தகாத முறைகளில் உறவுகளினை வைத்திருப்பதற்கு துணிவுடன் இறங்கி விடுவார்கள்.. இவை எதுவும் நேர விடாமலும் கலாசார சீரழிவுகள் ஏற்படாமலும் நல்லொழுக்கங்களை கட்டி காப்பாற்றுவதிலும் கவனம் செலுத்தி அதனை வளரவிடாது அவற்றினை பொலிஸார் முற்றுகையிடுவது வரவேற்கப்பட வேண்டியவை.

ஆறுகள், கடல்கள் நிறைந்த இடங்களில் அனுமதி இல்லாது மண் அகழ்வுகளினை மேற்கொண்டு வருகின்றனர். இதனையும் பொலிஸ் தடுத்து நிறுத்துகின்றனர். ஆறுகளில் கடல்களில் மணல்களை அகழ்கின்;றார்கள் எனின் சுற்றிவர உள்ள மக்களிற்குத்தான் பாதிப்பு. அந்த பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் வளங்களை காப்பாற்றி வருகின்றனர். இவையும் வரவேற்கப்பட வேண்டியவைதான்.

நாட்டின் பல பாகங்களிலும் காதல் ஜோடிகளை கைது செய்கின்றார்கள். பொது இடத்தில் கட்டிப்பிடிப்பதோ, முத்தமிடுவதோ தவறு எனக் கூறுகிறார்கள். இன்னொரு பக்கத்தில் “எங்களுக்கு இதற்கு கூடச் சுதந்திரமில்லையா?” என காதலர்கள் புலம்புகின்றனர்.

இவ்வாறு நல்ல பக்கங்கள் இருந்தாலும் இவர்கட்கு இன்னொரு முகமும் உள்ளது. அதனையும் பார்த்து விடலாம். (அண்மையில் வெளிவந்த குற்றப்பிரிவு படம் போல்த்தான்)

வெள்ளவத்தையில் பொதுவாக சனநெருக்கடி அதிகம். இதனால் ரஃபிக் பொலிஸினை அதிகளவாக அங்கேதான் குவித்தும் உள்ளனர். இதற்குள் பொலிஸார் ஒரு மோட்டபைக்கை கொண்டு அங்கும் இங்கும் ஓடித்திரிவார்கள்.

நீண்டதூர பயண வாகனங்களை மட்டும் அல்லாது மோட்டபைக் மற்றும் சிலர் வீதி விதிகளை மாறி பயணித்தால் கூட நிறுத்தி லஞ்சம் வாங்குவதனை கண்கூடாக பார்க்கக்கூடியதாக உள்ளது. முன்னர் லஞ்சம் வாங்குவது லைசன்ஸ் புத்தகங்களிற்கு உள்ளே வைத்து கொடுப்பார்கள் ஆனால் தற்போது அப்படி ஒன்னும் இல்லை. நேரடியாகவே எல்லா மக்களும் பார்க்கக்கூடிய விதத்தில் பணத்தினை வாங்குகின்றனர்.

வாகன ஓட்டுனர்களும் சிறிது நேரம் பேரம் பேசி (சந்தையில் பேரம் பேசுவது போல) பின்னர் திருப்திப்படாமல் பணத்தினை வழங்கி விடுகின்றனர். அவர்களிடம் சென்று ஏன் இப்படி அநியாயமாக பணத்தினை வழங்குகிறீர்கள் என கேட்டால் “பொலிஸ் ஸ்ரேசனும் போஸ்ட் ஒபீசுமா அலைய வைப்பான்கள் வேலைக்கும் போக முடியாது இழுபட்டு கொண்டே இருக்க வேணும் அதைவிட அவன்கள் கேட்கும் பணத்தினை குடுத்திட்டம் எனின் ஓடுப்பட வேண்டிய அவசியமும் இல்லை வேறு பிரச்சினை வராது.” என்கின்றனர் பல பேர். மக்களின் இந்த அலட்சிய போக்கே நாட்டிலே லஞ்சம் வளர்வதற்கு அடிப்படை காரணமாக உள்ளது. மக்கள் உஷார் நிலையில் இருந்தார்கள் எனின் லஞ்சத்தினை ஒழிக்கலாம் பொலிஸ் எனின் லஞ்சம் என முத்திரை குத்துவதை விட அம் முத்திரையை உடைக்க வேண்டும் எனின் மக்களாகிய நாங்கள் தான் லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறான இடங்களில் மட்டும் அல்ல எந்தவொரு வேலையும் பொலிஸ் மூலம் நடைபெற வேண்டும் எனின் அதிகளவானோர் (98மூ) பணத்தினை கொடுத்துதான் காரியங்களை செய்கின்றனர். இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதற்கு காரணம் (அதிகளவானோரின் கருத்துப்படி) “உடனே காரியம் ஆகவேண்டும் பணத்தினை வழங்கினால் உடனே செய்து முடித்து விடலாம். இழுபட்டுக் கொண்டு இருக்காது. பிரச்சினையும் வராது என எண்ணுகின்றனர்.” இவ்வாறு மக்களின் சிந்தனை சென்று கொண்டு இருந்தால், நாடு லஞ்சத்தினால் முன்னேறி விடும்.

பொலிஸ் என்ற தற்துணிவை பயன்படுத்தி எதுவும் சாதிக்கலாம் என எண்ணுகின்றனர். மருதமலை படம் எல்லோரும் பார்த்து இருப்பீர்கள் அதில் பிச்சைக்காரனுக்கு நிகராக வடிவேல் லஞ்சம் வாங்குவார். (அப்போது எல்லோரும் சிரித்து இருப்போம் ஆனால் நிஜத்தில் அவ்வாறு நடந்து இருக்கும் எனின்) லஞ்சம் வாங்கும் பொலிஸினை பிச்சைகாரனுடன் ஒப்பிடப்படுகின்றார்கள். அவ்வாறு எனின் பொலிஸ்காரர்கள் எல்லாம் அவர்களா?

இலங்கையிலே ஐந்து தொழில்கள் மிகவும் உன்னதமானது. அதிலே பொலிஸ் வேலையும் உள்ளடங்கலாக. மருத்துவர்கள், வக்கீல்கள்… இவர்கட்கு சமனானதுதான் பொலிஸ் தொழிலும். ஆனால் அத் தொழிலை பல பொலிஸ்காரர்களால் தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான சில காரணங்களினால்தான் இத் தொழிலிற்கு மதிப்பு இல்லாமல் போகுது. வெளிநாடுகளில் பொலிஸ் வேலை எனின் நல்ல மதிப்பு. ஆனால் இலங்கையில்……..

இவ்வளவு காலமும் பொலிஸ் தொழில்தான் லஞ்சம் பெறுவதில் முதலிடம் வகித்து வந்தது. இப்போ அது கல்வியை முன்னுக்கு தள்ளி விட்டு தான் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.



யாருக்கும் சவால் விடப் போறனோ எண்டு நினைச்சிடாதீங்க, இது எனக்கு அண்மைக்காலத்தில் மிகவும் பிடித்த பாட்டு.

மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ராவணன் திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே அனுபவித்துப் பாடிய பாடல்.

பொதுவாக முன்னைய காலங்களில் படங்களின் எழுத்தோட்டத்தை ஆரம்பத்திலேயே காட்டி விடுவார்கள். இப்பொழுது தமிழ் சினிமாவிலும், ஆங்கிலத் திரைப்படங்களைப் போல படம் முடிந்த பிறகு தான் படத்தின் தூண்களின் பெயர்களைக் காட்டுகிறார்கள். அதை யார் பார்க்கப் போகிறார்கள்.

ராவணன் இறுவட்டில் இல்லாத பாடலொன்று படத்தில் இடம்பெற்றுள்ளது. "நான் வருவேன்.. மீண்டும் வருவேன்.." அதற்காகவே தியேட்டரில் எழுத்தோட்டம் முடியும் வரை நின்று பார்த்தேன்.

இது இயக்குனரின் தந்திரமா?

என்ன செய்வது? நீங்களும் தியேட்டரில் பார்க்காத எழுத்தோட்டத்தை இங்கே பாடலுடன் பாருங்கள்.




வணக்கம் பதிவுலக நண்பர்களே!

இன்று உலகச் சுருங்கி விட்டது. அச்சு ஊடகங்களை விட இலத்திரனியல் ஊடகங்களும், இணையங்களும் மக்களை ஆட்டுவிக்கின்றன. குறிப்பாக இணைய எழுத்தாளர்கள். நம் சிந்தனையில் தோண்றும் எண்ணங்களை எழுத்து வடிவில் கொண்டு வந்து அதனை வாசகர்களின் கைகளில் வலைப்பதிவுகளாக விட்டு விடுகின்றோம். பிடித்தால் பாராட்டுக்களையும் பெற்றுக் கொள்கின்றோம். இல்லாவிட்டால் உடனடித் திட்டுக்களையும் பெற்றுக் கொள்கின்றோம்.

இணையத்தில் ஏதோ கிறுக்கத் தொடங்கியவர்களில் பலபேர் கைதேர்ந்த எழுத்தாளர்களாக இன்று மாறியதனையும் மறுக்க முடியாது. என்னதான் இணையத்தில் எம் எழுத்துக்களை வாசித்தாலும், எம் எழுத்துக்கள் கைகளில் நூல் வடிவில் தவளும் போது, அதை பார்ப்பதே தனிச் சந்தோஷம்.

வலைப்பதிவு எழுத்தாளர்கள் பலர், பல ஊடகங்களில் எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள். அது மட்டுமல்லாது பல பதிவர்களது பதிவுகள் ஊடகங்களில் எடுக்கப்படுகின்றன. (களவாகவும்). ஆனால் வலைப்பதிவர்களின் பதிவுகளை திரட்டி ஒரு புத்தகமாகவோ அல்லது சஞ்சிகையாகவும் வெளிக் கொணர பலரும் முயற்சித்தாலும் (முயற்சித்து கொண்டிருந்தாலும்) அது பாரியளவில் கைகூடவில்லை.

நாங்கள் சிலர், நண்பர்களாக இணைந்து பதிவர்களின் வித்தியாசமான பதிவுகளைத் திரட்டி ஒரு சஞ்சிகை வடிவில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை வெளியிட முயற்சிகளை எடுத்து வருகின்றோம். பக்க வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நாங்களே கையாளப்போகின்றோம். எனவே குறை நிறைகள் இருக்கும். ஆனாலும் உங்கள் கைகளில் கிடைக்கும் போது அது பூரணமான சஞ்சிகையாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கூடியவரை மேற்கொள்வோம்.

இது எந்த அமைப்பையோ, நிறுவனத்தையோ சார்ந்ததாக அல்லாமல் பதிவர்களின் கூட்டு முயற்சியாக இருக்கும். தகுந்த பக்க பலங்கள் இணையும் போது சஞ்சிகையை இலவசமாக கொடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.

எனவே அடுத்துவரும் 3 மாத காலப்பகுதிக்குள் ஒரு வலையுலக எழுத்தாளர்களின் சஞ்சிகை ஒன்றை எதிர்பாருங்கள். எல்லா பதிவர்களுடைய பதிவர்களையும் நாங்கள் மட்டும் கண்காணிப்பது என்பது இயலாத காரியம். எனவே நாங்கள் விசேடமாக குறிப்பிடும் காலப்பகுதியில் நீங்கள் வாசித்த, ஆக்க பூர்வமான பதிவுகளை நாங்கள் குறிப்பிடும் தொடர்பு முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்.

ஒற்றுமையுடன் கைகோர்ப்போம்.

நன்றி

பி.கு : இது இலங்கைப் பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டுமே!


வன்னியில் இடம் பெற்று வரும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய இந்தியாவின் விஷேட நிபுணர் குழு ஒன்று இலங்கை வரவுள்ளது. எதிர் வரும் இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள 47ஆயிரம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலே மீள்குடியேற்றப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இம் மீள்குடியேற்ற பணிகளுக்கு இந்திய அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், யுனிசெப் உட்பட பல்வேறு சர்வதேச பொது அமைப்புக்களும் நிறுவனங்களும் பல வழிகளில் உதவிகளை வழங்கி உள்ளன.

மீள் குடியேற்றப்படும் அனைத்து மக்களுக்கும் தலா 75 ஆயிரம் ரூபாவும் ஆறு மாதத்திற்கு தேவையான பொருட்களும் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படுகிறது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் பிரதேச செயலக அதிகரிகளிடம் தெரிவிக்கலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பகுதிகளில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் 75ஆயிரம் ரூபாய் என்பது அவர்களிடம் ஒழுங்காக சென்றடையவில்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தொகை வழங்கப்படுகிறது. பூரணமாக 75ஆயிரம் ரூபாயும் சென்றடைய வேண்டுமெனின் அதற்கு பொறுப்பான அமிகாரிகள் தான் கவனம் எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாண மக்களுக்கு சென்று சேரும் உதவிகளைப் போல் வவுனியா மற்றும் கிழக்கு பகுதி மக்களை சென்றடைய வில்லை என்ற கருத்தும் இருக்கின்றது. இதற்கான காரணம் பல்வேறு பட்ட தரப்பினரதும் நோக்கு யாழ்ப்பாணமாக இருக்கலாம். 75ஆயிரம் பணம் தான் சென்றடையவில்லை எனின் 6 மாதத்திற்கு தேவையான நிவாரணங்கள் கூட அவர்களிற்கு சென்றடையவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். கிளிநொச்சி நகர்புற மக்களுக்குத்தான் சிறியளவிலான நிவாரணங்கள் சென்று அடைந்துள்ளது. ஏனைய பகுதி மக்கள் நிவாரணத்திற்காக தவம் கிடப்பதாக அங்கிருந்து கிடைக்கும் உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்பட்ட போதும் இதுவரைக்கும் கடலில் மீன்பிடிப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்கிறார் மீன்பிடி தொழிலாளியான ஜொனிற்றன். அவர்களுடைய தொழிலுக்கு ஏற்ற உபகரணங்கள் எதுவுமே வழங்கப்பட இல்லை. அது மட்டும் அல்ல “எனக்கு கொஞ்சம் சிங்களம் தெரியும். அதனால பிரதேச செயலாளர் மூலம் போய் கதைத்து பொமிஷன் எடுக்கப்போறன்" எனவும் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் தான் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் உள்ளனர்.

காடுகளுக்கு சென்று விறகுகளை வெட்டவும் விவசாயம் செய்யவும் அனுமதி பெறுவதில் எவ்வித தடைகளும் கிடையாது. மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அரசாங்கம் 50ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு நிதி வழங்க முன்வந்துள்ளது. அதை விட மேலும் 1லட்சத்து 70ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன என பிரதியமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் மீள்குடியேற்றப்படுவார்களென தெரிவித்திருக்கும் நிலையில் அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவது எப்போது?