twitter










இன்று சமுதாயத்தில் முதலிடம் வகிப்பது கல்விதான் கல்வியை அடிப்படையாக வைத்துதான் மனிதன் முன்னேறுவதற்கு அதிகளவான வாய்ப்புள்ளது. இவ்வாறான கல்விகளிலே ஊழல்கள் நிறைந்து காணப்படுகின்றன. நேர்மை திறன்மிக்க தேசத்தை கட்டியெழுப்புவோம் எனும் நிறுவனம் ஓர் முன்மாதிரியான ஆய்வு ஒன்று செய்து வெளியிட்டது. அதிலே ஊழல்களிலே முதலிடம் வகிப்பது பாடசாலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் பல்வேறு விதமாக ஊழல்கள் நிகழ்கின்றன எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. மாணவர்களை பாடசாலையில் அனுமதிப்பதற்கு, ஆசிரியர்களை இடம்மாற்றுவதற்கு, அதிபர் பதில்அதிபர்கள் நியமனம் செய்வதற்கு, பாடப்புத்தகம் வழங்குவதற்கு, பரீட்சைகள் நடாத்துவதற்கு, புள்ளிகள் வழங்குவதற்கு, உட்கட்டமைப்பு நிறுவுவது போன்ற அத்தனை விடயங்களிலும் ஊழல்கள் நிறைந்து காணப்படுகின்றன.



இவ்வாறு பல வழிகளிலும் கல்வியில் ஊழல் உட்செவ்வதால் பாதிக்கப்படுவது எதிர்கால இளம் சமுதாயம்தான.; இன்றைய தலைவர்களின் பொக்கட்டுக்களில் பணம் நிறையுமே தவிர நாளை வரப்போகும் தலைவர்களுக்காக எந்தவிதமான அத்திவாரமும் இல்லாதுபோகும். ஒழிக்கப்பட வேண்டிய இலஞ்சமானது எல்லாத்துறைகளையும் ஆக்கிரமித்தது மட்டுமல்லாது கல்வித்துறையிலும் தன் ஆதிக்கத்தை செலுத்துவதற்கு காரணம் அரசியல் தலைவர்களின் தலையீடுதான். கல்வி அமைச்சு அது சார்ந்த அமைச்சர்கள் தங்களுடைய செயற்பாடுகளை கல்வித்துறைக்குள் திணிக்க முற்படுவதால் இலஞ்ச ஊழல் நடவடிக்கைகள் அதிகரிக்கின்றது.

தொடரும் ஊழல் நடவடிக்கைகளால் நாட்டில் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. வேலையற்ற பட்டதாரிகள் வேலை நியமனம் செய்யுமாறு ஒரு புறத்தில் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களை மேற்கொள்ளும் அதேவேளை தற்போது நாட்டில் 19 ஆயிரத்து 819 ஆசிரியர்கள் தேவை என கூறப்படுகின்றது. இந்த நிலமையை எவ்வாறு சமநிலைப்படுத்த முடியும். இரண்டு கோணங்களும் வேறுபட்டதாகவே காணப்படுகின்றது. இவ்வாறு பல எண்ணிக்கையிலான பட்டதாரிகளை வைத்துக்கொண்டு அரசியல் செல்வாக்கால் தகைமையற்றவர்கள், ஆசிரியருக்கான முன்பயிற்ச்சியற்றவர்கள், தரவரிசை முறையில் ஒழுங்குபடுத்தப்படாதவர்களை நியமனம் செய்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் விளைவு என்ன? மாணவரின் கல்வி வீழ்ச்சி நிலைதான்.












இன்றைய காலத்தில் அதிகமாக மோசடி இடம்பெறுவது தரம் 01, தரம் 05 பாடசாலை அனுமதியில்தான். பாடசாலை அதிபர்கள் தங்களுக்கு விரும்பிய தொகைகளை பெற்றோர்களிடமிருந்து அறவிடுகின்றார்கள். இதனால் எத்தனையோ மாணவர்கள் பாடசாலைக் காலத்தை இழக்க வேண்டிய பாரிய நெருக்கடியை தோற்றுவிக்கின்றது. இது தொடர்பாக அரசின் நடவடிக்கைகள் இன்னும் திருப்திகரமானதாக இல்லை. ‘எங்கள் பிள்ளைகளுக்கு இந்த பாடசாலை அனுமதியளிக்கவில்லை’ என்று ஆர்ப்பாட்டம் செய்யும் பெற்றோரும், வழக்குத் தொடர்பவர்களும், ஏன் உயிரைக்கூட விடுபவர்களும் இருக்கின்றார்கள். கல்விக்காக இப்படியான பரிதாப நிலை தேவையா?. சிந்திக்கவே கவலையாக இருகின்றது.













ஜனாதிபதி தொடக்கம் அதிபர் வரை அனைவரும் பாடசாலைகளில் தான் கல்வி கற்றவர்கள். கல்வி அறிவுடையவர்கள் கூட கல்வியை வணிகப்பொருளாக மாற்றுவது எந்த விதத்தில் நியாயமாகும். அவர்கள் தாங்கள் நடந்து வந்த வாழ்க்கைப் பாதைகளை சிந்திப்பதில்லையா? அவர்களும் அப்படித்தான் காசைக்கொட்டி கொடுத்திருப்பார்களா?


கல்வி என்ற ரீதியில் நோக்கும்போது இலங்கையில் இது அனைவருக்கும் உரித்தான அடிப்படை உரிமையாகின்றது. இதனை சகலருக்கும் கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கமாகும். பாடசாலைக்கல்வியை இலகுவாக கிடைக்க உரியவர்கள் வழி செய்வார்களா? இதற்கு பொதுமக்கள் முன் வரவேண்டும். இது தொடருமாக இருந்தால் நாளைய சமூகம் வெற்று சமுகமாக உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறான சீரழிவுகள் உடனுக்குடன் சீர்திருத்தப்பட வேண்டும்.



இலங்கையை அடுத்த 6 வருடத்திற்கு ஆளப்போகும் ராஜாவைத் தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதித்தேர்தல் 2010 நாளை இடம்பெறவுள்ளது. ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் நாட்டு மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மணித்துளிகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


இம்முறை வேறெப்போதும் இல்லாத அளவிற்கு 22 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுகின்றனர் அதில் முன்னிலையில் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் (மஹிந்த ராஜபக்ஷவும் சரத்பொன்வேகரவும்) மக்களை தேர்தலில் பங்குபற்றுவதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார்கள்.

ஆனாலும் சிறுபான்மையின மக்கள் பலர் அதில் நாட்டம் கொள்ளவில்லை. ‘மக்களின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?’ என எல்லாமே ஒன்றுதான் என எண்ணி வருகின்றனர். ஆனாலும் அவ்வாறு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் நம் நாட்டின் தலைவரை தெரிந்து எடுப்பது மக்களது கடமை ஆகும். இந்த உரிமையை மக்கள் தவற விடவும் கூடாது விட்டும் கொடுக்கவும் கூடாது.

யார் ஜனாதிபதியாக வந்தாலும் எந்த ஜனாதிபதி எமது நலனை பேணப்போகின்றார்கள்? என இருக்க கூடாது. சில மக்கள் இரு மன நிலையில் உள்ளனர் சரத்பொன்சேகராவிற்கு வாக்களிப்பதா? அல்லது மஹிந்தவிற்கு வாக்களிப்பதா? என்பதில் குழம்பியுள்ளனர். சட்ட விரோதமாக பல பதாதைகள் சுவரொட்டிகள் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அதனை மக்கள் கிழித்து எறிவதையும் சேறு பூசுவதையும் சுவரொட்டிகள் மீது வெற்றிலை துப்பல்களையும் நேரடியாக காணக்கூடியதாக உள்ளது.

வீதியில் இருந்து துண்டு பிரச்சாரங்கள் செய்யும்போது துண்டு பிரசுரங்iளை வேண்டி கொடுப்பவர்கள் முன்னே கிழித்து எறிந்து விட்டு செல்வதை காணக்கூடியதாக உள்ளது. சரத்பொன்சேகாவிற்கு வாக்கு அளிக்கும்படி இராணுவத்தினர் வெளிப்படையாகவே பிரச்சாரங்கள் செய்தனர். இவ்வாறு பிரச்சாரம் செய்த பலாலி படைமுகாம் அதிகரியான ஆர் டீ ஏ ரணவீரரை கைது செய்துள்ளனர். அது மட்டும் அல்லாது படையினர் தின் பண்டங்கள் வழங்குவதையும் காணக்கூடியதாக இருந்தது.

ஒரு சில மக்கள் மஹிந்த ஆட்சிக்கு வந்தால் மீள்குடியேற்றங்கள் செய்வார் என்றும் அதே நேரம் எதிரணி வேட்பாளர் அரச உத்தியோகத்தர்களிற்கு மாத வருமானத்தினை பத்து ஆயிரம் ருபாவால் அதிகரிப்பார் என்றும் நம்பியுள்ளனர்;. இவ்வாறான சூழ் நிலைகளில் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என திணறுகின்றனர். ஒரு சில மக்கள் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வேண்டும் என சரத்பொன்சேகரவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். சில வீட்டு முன் வாயில்களில மஹிந்தவின் உருவப்படமும் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படமும் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. ஈ.பி.டி.பி.யினர் பிரசாரங்களில் முன்னனியில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது. 20-01-2010 யாழில் முதல் முதலாக வன் முறைகள் பதிவாகியுள்ளது. எதிரணியினரின் பிரச்சாரத்திற்கு சென்று வந்த மக்கள் மீது கல்வீக்சு மேற்கொள்ளப்பட்டது. எது எவ்வாறு இருப்பினும் யார் ஆட்சி பீடத்தில் ஏறினாலும் மக்களுடைய நலனை பேணி நாட்டை பாதுகாப்பது கடமையாகும்.


















சின்ன வயதிலே எத்தனையோ பேர் காலை காட்சி, மாலைகாட்சி என எழுதி இருப்பீர்கள்? எத்தனையோ பேர் வீட்டில் அம்மா, அப்பா, சித்தி, மாமி என எல்லோரிடமும் கெஞ்சி, பேச்சுவாங்கி மாலை காட்சியைப்பற்றி எழுதி மனப்பாடம் செய்து அதை ரீச்சர் முன் கொண்டு சென்று ஒப்புவித்தோ அல்லது முதலாவதாக எழுதியோ காட்டி இருப்பீர்கள்?


மாலைகாட்சி என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது எது என்று கூறுங்கள் பார்ப்போம்…? சூரியன் மறைவதும், பறவைகள் கூடுகளிற்கு செல்வதும், விவசாயிகள் வீடு செல்வதும், சிறுவர்கள் விளையாடுவதும், ஆலய மணி ஒலிப்பதும், அம்மா கோயிலுக்கு விளக்கேற்றி விட்டு வீடு வருவதும்தான் தெரியும்.


எனினும் இவற்றை எல்லாம் தாண்டி அந்த வயதில் வித்தியாசமாக எழுத வேண்டும் என அதிகளவான மாணவர்களிற்கு தோன்றியும் இருக்காது, சிந்தித்தும் இருக்க மாட்டார்கள். ஏதோ ரீச்சர் சொல்லி விட்டா அதை முதலில் நான் செய்து முடிக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டும்தான். மாலை காட்சியை அவ்வாறுதான் சிறார்கள் இப்பவும் எழுதியும் வருகிறார்கள்.

மாலை காட்சியை ரீச்சர் படம் வரையுங்கள் என்றால் என்ன எடுத்தவுடன் கடலையும் மலையையும் விவசாயிகளையும் பறவைகளையும் ஓடி விளையாடும் மாணவர்களையும் தான் வரைவோம். அதற்கு பெரும்பாடு படுவோம். வரைவதும் அழிப்பதும் பக்கத்து கொப்பியை பார்ப்பதும் என்னை விட அழகாக யாராவது வரைகின்றார்களா? என பார்ப்பதிலே நேரத்தினை போக்கி விடுவோம்.










ஆனால் கொழும்பில் இன்று அவ்வாறு இல்லை. மாலை என்றதும் றஃவிக் நிறைந்த றோடும், பீச் நிறைய காதல் ஜோடிகளும், இன்னொரு பகுதியில் குடும்பமாக பீச்சை நிறைத்துக் கொண்டு குந்தைகளுடன் நிற்பார்கள். அது மட்டும் அல்ல அவசர அவசரமாக வீடு செல்லும் மக்களும், ரீயுசனில் இருந்து பிள்ளைகளை இழுத்து கொண்டு ஓடும் பெற்றோரையும்தான் காணலாம்.


அன்று நாம் மாலைக்காட்சி எழுத எவ்வளவு கஸ்ரப்பட்டோம். ஆனால் இன்று ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்;றவுடன் சரியோ பிழையோ எழுதி தள்ளி விடுகின்றோம். யாருடைய விமர்சனமாக இருப்பினும் அது பிடித்த மாதிரியான விமர்சனமோ அல்லது பிடிக்காத விமர்சனமோ எதையும் ஏற்க தயாராக உள்ள மனநிலையில் உள்ளோம்.