twitter


இன்று உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்தமான பார்வையும் ஜெனீவாவின் பக்கம் திரும்பியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 19ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இது இலங்கை அரசாங்கத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தொடரில் தாம் பங்கேற்கப்போவதில்லை என த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கூற்று ஒட்டுமொத்த த.தே.கூ உறுப்பினர்களது கூற்றல்ல என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தக்கூட்டத்தொடரில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவானது சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள இன்றைய நாளில் மாநாடு நடைபெறவுள்ள இடத்திற்கு முன்பாக இலங்கை தொடர்பான சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்று இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் - வவுனியா – மட்டக்களப்பு – கொழும்பு ஆகிய இடங்களில் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தமிழ்க்கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டங்களை வடக்கு – கிழக்கில் முன்னெடுத்தார்கள். கொழும்பு கோட்டை ரெயில் நிலையப்பகுதியில் தற்போது பெருமெடுப்பில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதால் போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள சட்டக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மேலும் பல உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் போக்குவரத்துக்கு பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தங்கள் உறவினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment